பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அறத்தின் குரல்


வாழ்வதே இன்பம்‘ -என்பதை நன்குணர்ந்திருந்த தருமன் தன்னுடைய தலை நகரத்தை வேறிடத்திற்கு மாற்றிக் கொள்ளக் கருதினான். இந்திரப் பிரத்தம், முன்னோர்கள் வாழ்ந்து சிறந்த நகரம். ஆனால் தற்போது வெறும் வெளியாக இருந்தது. தொன்மைச் சிறப்பு வாய்ந்த அந்த நகரத்தைத் திருத்தி அமைத்துத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொள்ளத் தீர்மானித்தான் தருமன். இந்திரப்பிரத்தமோ காண்டவப் பிரத்தம் என்னும் பாழடைந்த நகரத்துக்கு அருகில் இருந்தது. எந்த முக்கியமான செயலைச் செய்வதாக இருந்தாலும் கண்ணப்பிரானைக் கலந்து கொண்டே அதைச் செய்யும் வழக்கம் தருமனிடம் இருந்தது. இந்திரப் பிரத்த நகரத்திற்குப் புறப்படும்போது தன் சகோதரர்களுடனே கண்ணபிரானையும் அழைத்துக் கொண்டு சென்றான்.

இந்திரப்பிரத்தம், அப்போதிருந்த பாழ் நிலையைக் கண்ட கண்ணன் அதில் அந்த நிலையிலேயே பாண்டவர்கள் வசிக்க முடியாதென்பதை உணர்ந்தான். அருள் நிரம்பிய அவன் உள்ளம் மலைத்தது. தயங்கித் திகைத்தது. கண்ணபிரானே மனம் வைத்தால் நடக்காத துண்டா? பாண்டவர்களுக்கு நலம் புரிய வேண்டும் என்ற ஆர்வம் அந்த அடியார்க்கருளும் பண்புடைய மனத்தில் தோன்றி விட்டதானால் பின் என்ன குறை? வானவர் தலைவனாகிய இந்திரனும் வானுலகத் தச்சனாகிய விச்சுவகன்மா என்பவனும் கண்ணபிரானால் பாண்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும்படி வேண்டிக் கொள்ளப்பட்டனர். தேவர்களே உதவி புரிய முன் வந்தால் காரியம் வெற்றிகரமாக முடிவதற்குக் கேட்கவா வேண்டும்? காடும் புதருமாக மண்டிக் கிடந்த இடத்தில் கவின் மிக்க மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் எழுந்தன. எல்லா வகையான அழகுகளும் நிரம்பிய ஓர் நகரம் அங்கே உருவாயிற்று. ‘அமராபதியும் அளகாபுரியும் இதற்கு இணையாக இயலாது’ என்று மண்ணவர்களும் விண்ணவர்களும் கொண்டாடும் படியாக அவ்வளவு சீரும் சிறப்பும் கொண்டு இலங்கியது அந்தப் புதிய