பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அறத்தின் குரல்

இந்நிலையில் இந்திரப்பிரத்த நகரத்து வாழ்வு கோலாகலமாகக் கழிந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத நிலையில் இசைப் புலவரும் மூவுலகங்களிலும் சஞ்சரிக்கின்றவருமாகிய நாரத முனிவர் ஓர் நாள் (இந்திரப்பிரத்த நகருக்கு) அங்கே விஜயம் செய்தார். அவருடைய வரவை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் கொண்ட பாண்டவர்கள் அன்புடனும் ஆர்வத்துடனும் தக்க உபசாரங்கள் செய்து அவரை அரண்மனையில் வரவேற்றனர். ஏதாவது ஓர் இடத்திற்கு நாரதமுனிவர் வருகின்றார் என்றால் அவருடனே சிறப்புமிக்க செய்தி ஒன்றும் வருகின்றது என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அன்றும் ஒரு செய்தியோடுதான் இந்திரப்பிரத்த நகரத்தில் பாண்டவர்களைக் காண்பதற்கு வந்திருந்தார் அவர். அது வெறும் செய்தி மட்டும் இல்லை. பாண்டவர் நலனில் அக்கறை கொண்டு கூற வந்த செய்தி. அதை அவர் சொல்லத் தொடங்கிய போது, ‘இவர் இப்போது எதற்காக இப்படி ஏதோ கதை கூறுவது போலக் கூறுகிறார்?’ -என்று திகைத்தனர் பாண்டவர். இறுதியில் தான் அவர்களுக்கு நாரதர் கூறவந்த கருத்து விளங்கியது.

“பாண்டவர்களே முற்காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன். இது ஒரு பெண்ணின் காரணமாக இருவர் தங்களுக்குள் மாறுபட்டுப் பெறுவதற்கரிய தவத்தையும் இழந்து போன நிகழ்ச்சி அது. அதை நீங்கள் இப்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சுந்தன், உப சுந்தன் என்று இருவர் பிரம்மாவை நோக்கி இடைவிடாமல் தவம் செய்து கொண்டிருந்தனர். தவம் வளர வளர அதன் சித்தி அருகில் நெருங்கும் அல்லவா? சுந்தோப் சுந்தர்களுடைய தவமும் அதன் பயனை சித்தி வடிவில் பெற வேண்டிய காலம் வந்தது. அப்போது இறுதி முறையாக அவர்களுடைய தவத்தைச் சோதனை செய்யும் பொருட்டு வானுலகிலிருந்து திலோத்தமை அனுப்பப்பட்டாள். பிறரை மயக்கி மோகத்துக்கு மிக விரைவில் ஆளாக்கி விடும் சக்தி வாய்ந்த