பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

111

நீராடும் வாய்ப்பைப் பெற்றான். உடன் வந்த முனிவர்கள் யாவரும் அவரவர்களுக்குத் தோன்றிய துறைகளில் நீராடுவதற்காக இறங்கினர். அர்ச்சுனன் மட்டும் ஒதுக்குப்புறமாகத் தனியே ஓர் துறையில் இறங்கினான்.

அந்தத் துறையருகே பெரும் பெரும் பாறைகளும் பாறைக் குகைகளும் இருந்தன. துறையில் இறங்கி நதியின் நடுப்பகுதிக்கு வந்து நீராடிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். அப்போது கரையருகே இருந்த பாறைப் பிளவுகளோடு கூடிய குகை ஒன்றிலிருந்து யாரோ சில பெண்கள் சிலம்பு குலுங்க நடந்து வரும் ஒலி கேட்டது. வளையொலியும் சிலம்பொலியும் கேட்டு வருபவர் யௌவன மகளிர் என்பதை அனுமானித்துக் கொண்டான் அவன். உடனே அவர்கள் தன்னைக் கண்டு அஞ்சி ஓடிப் போய்விடாமல் இருப்பதற்காகச் சில வினாடிகள் மூச்சை அடக்கி நீரில் மூழ்கிக் கொண்டான். மேலெழுந்து மறுபடி அவன் தலை நிமிர்ந்து பார்த்தபோது செளந்தரியமான காட்சியை அங்கே கண்டான். விண்மீன்களுக்கு நடுவே எடுப்பாக விளங்கும் தண்மதியைப் போல, பல இளம் பருவத்துத் தோழிப் பெண்களுக்கு நடுவே தனியழகுடன் நாககன்னிகை போலத் தோன்றிய யுவதி ஒருத்தி நீராட இறங்குவதற்காக ஆடை அணிகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அங்கங்கள் அத்தனையும் கண்களாகவே இருந்தால் இரண்டு கண்களால் மட்டும் பார்க்க முடியாத அவள் அழகைப் பரிபூரணமாக அனுபவிக்கலாமே என்று தோன்றியது அவனுக்கு. நீராடுவதற்குத் தயாராக ஆடை அணிகளைக் குறைத்துக் கொண்டு நின்ற அந்த நிலை அந்த யுவதியின் சரீரத்தில் ஒவ்வொரு அணுவிலும் ஜதி போடுகின்ற அழகை அவன் கண்களுக்குக் காட்டின. அர்ச்சுனன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றான்.

சட்டென்று அவர்கள் துறையிலே இறங்குவதற்காகத் திரும்பியபோது அவள் பார்வை நீரோட்டத்தின் நடுவே நின்ற அவன் மேல் நிலைத்தது. ஓடும் நீர் நடுவே எடுப்பான தோற்றத்தோடு நிற்கும் அவன் அழகு அவளைத் தலைகுனிய