பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

113

போக வாழ்வாகிய அந்த வாழ்வில் நாட்கள் கழிந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. காலம் நேரம் இவைகளை மறந்து தன்மயமாய் ஒன்றி நுகரும் இன்பந்தானே உயர்ந்த இன்பம். அர்ச்சுனனுக்கும் உலூபிக்கும் இராவான் என்றோர் புதல்வன் பிறந்தான். புதல்வன் பிறந்த சில நாட்களுக் கெல்லாம் அர்ச்சுனன் நாகலோகத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் தனது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினான். நாகலோகத்திலிருந்து திரும்பி வரும் போது, இமாசலத்தின் சாரலிலுள்ள பல தீர்த்தங்களிலும் நீராடி மகிழ்ந்தான். இவ்வாறே வடநாட்டிலுள்ள சகல தீர்த்தங்களிலும் நீராடி முடித்த பிறகு ஞானவளமும், நில வளமும் மிகுந்து, ‘சித்திக்கு ஒருவித்து’ -என்று கூறத்தக்க சிறப்பையுடைய தென்னாட்டை அடைந்தான் அர்ச்சுனன்.

தென்னாட்டில் அவன் முதல்முதலாகப் பார்த்த இடம் திருவேங்கடமலை. தமிழ்த்திருநாட்டின் வடபால் அமைந்திருந்த அந்தத் திருமலையில் உள்ள அருவிகளில் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டபின் காஞ்சிபுரம், திருவண்ணாமலை சிதம்பரம் முதலிய தலங்களைக் கண்டான். அங்கங்கே இருந்த ஆறுகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி மேற் சென்றான். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகின்ற ஸ்ரீரங்கத்திற்கு வந்து காவேரியில் நீராடி அரங்கநாதப் பெருமானைத் தரிசித்துக்கொண்டு பொதியைத் தென்றலும் தமிழ்த் தென்றலும் ஒருங்கு வீசும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த மதுரை மாநகரத்தை அடைந்தான். வையை வளமும் தமிழ் வளமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சி வளமும் ஒருங்கு திகழும் கூடல் மாநகரில் பாண்டிய மன்னர் பரம்பரையில் அப்போது ஆண்டு கொண்டிருந்த அரசனைக் காணச் சென்றான்.

“துறவுக் கோலமுடையவர் போலத் தோன்றுகிறீர்! மிக இளம் பருவத்தில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவு மேற்கொண்டு விட்டீர் போலும் நீவிர் இங்கே பாண்டிய நாடு

அ.கு. - 8