பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அறத்தின் குரல்

துவாரகைக்கு வந்து தங்கி இருப்பதை அறிந்து கோட்டை வாயில் ஆலமரத்தில் அமர்ந்து கொண்டிருந்த அவனுக்கு முன்னால் தோன்றினார்.

அவன் மனத்தில் யாரைப் பற்றிய இன்பகரமான நினைவுகளோடு எதற்காக வந்திருக்கிறான் என்பதைத் தம்முடைய ஞானதிருஷ்டியால் உணர்ந்து கொண்டார். அர்ச்சுனனோடு சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மறுநாள் அவன் அவா நிறைவேற்றப்படும் என்று கூறிவிட்டுச் சென்றார் அவர். மறுநாள் துவாரகைக்கு அருகிலுள்ள மலை ஒன்றில் அந்நகரத்து மக்கள் இந்திரதேவனுக்காகக் கொண்டாடுகிற விழாவின் பொருட்டுக் கூடியிருந்தார்கள். கண்ணன், பலராமன், சுபத்திரை முதலிய ராஜ குடும்பத்தினரும் அங்கே வந்திருந்தார்கள். கண்ணபிரான் துறவிக் கோலத்திலிருந்த அர்ச்சுனனையும் அங்கே அழைத்து வந்திருந்தார். திருவிழாவுக்காக வந்திருந்தவர்கள் கபட சந்நியாசியாக வீற்றிருந்த அர்ச்சுனனை ‘சிறந்த சக்திகளைப் பெற்ற மாபெருந்துறவி இவர்‘ - என்றெண்ணி வலம் வந்து வணங்கினர். பலராமனும் சுபத்திரையும் கூட இந்த மாபெருந் துறவியின் சிறப்பைக் கேள்வியுற்று இவரை வணங்கிச் செல்வதற்காக வந்தனர். அப்போது அவர் - களுடனே கண்ணபிரானும் வந்தார். உடன் வந்தவர்கள் சந்தேகப்படாமலிருப்பதற்காகக் கண்ணனும் அர்ச்சுனனைப் பயபக்தியோடு வணங்குகிறவர் போல நடித்தார்.

“ஆகா!உலகமெல்லாம் வணங்கக் கூடிய சர்வேசுவரனும் என்னைக் கையெடுத்துக் கும்பிடும்படியான அபசாரத்தைச் செய்து விட்டேனே” -என்று மனத்திற்குள் தன்னை நொந்து கொண்டான் அர்ச்சுனன். “அண்ணா! இவர் பெரிய ஞானி. நம் தங்கை சுபத்திரையே கன்னிகை மணமாக வேண்டியவள். இவரைப் போன்ற ஞானியர்களுக்குக் கன்னிகைகள் தொண்டு செய்தால் விரைவில் நல்ல கணவனை அடையலாம். எனவே இந்த முனிவரின் தொண்டில் சுபத்திரை