பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

135


இப்படிக் கேட்டது வீமன் முதலிய மூவரையும் திடுக்கிடச் செய்தது. என்ன சொல்வதென்று தயங்கினர்.

“உண்மையை நீங்களாகச் சொல்லாவிட்டால் நானாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட நேரிடும்”

இனியும் தயங்குவதில் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணபிரான் உண்மையைக் கூறிவிட்டார். “நாங்கள் மூவரும் இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து வருகிறோம். உண்மையில் நாங்கள் ஷத்திரியர்கள்தாம்! நான் கண்ணன், வீமன், அவன் அர்ச்சுனன்! மூவரும் மாறுவேடத்தில் இவண் வந்திருக்கிறோம். உண்மை இது தான்.”

“என்ன காரியத்திற்காக இந்த மாறுவேடத்தில் இங்கே வந்தீர்கள்?”

“கிரிவிரச நகரத்தின் அழகைப் பற்றி கேள்விப் பட்டோம். பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தோம்.” கண்ணபிரான் தன்னைச் சமாளித்துக் கொண்டு இந்த மறுமொழியைக் கூறினார். சராசந்தன் இடி இடிப்பது போலத் கை கொட்டிச் சிரித்தான்.

“யாரை ஏமாற்றலாம் என்று இப்படிப் பேசுகிறீர்கள் நீங்கள்? உண்மையாக நகரைப் பார்க்க வந்திருந்தால் ஏன் இந்த மாறுவேடம்? நல்லது. நீங்கள் இங்கே வந்தது ஒரு காரியத்திற்கு நல்லதாகப் போயிற்று. வெகு நாட்களாகப் போருக்கு ஆளின்றித் தினவெடுத்துள்ளன என் தோள்கள். இப்போது உங்களுடன் போர் புரிவதன் மூலம் அந்தத் தினவைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெண்ணுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களில் என்னோடு போர் புரியத் தகுதிவாய்ந்தவர்கள் யார்?”

“ஏன் நாங்கள் மூவருமே போருக்குத் தயாராக இருக்கிறோம்?”

“இல்லை! இல்லை! முடியாது. உங்களில் கண்ணன் என்னோடு பதினெட்டு முறைபோர் செய்து தோற்று ஓடியவன். அவனோடு போர் செய்ய நான் விரும்பவில்லை.