பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அறத்தின் குரல்

உதவ வேண்டுமென்று எண்ணினார். அரிய மாங்கனி ஒன்றை அவனுக்கு அளித்து அதை அவன் மனைவிக்குக் கொடுக்கும் படிக் கூறினார். பிருகத்ரதன் முனிவருக்குத் தன் நன்றியைத் தெரிவித்து விட்டு அரண்மனைக்குச் சென்றான். அவனுக்கு இரு மனைவியர். அதை அவன் முனிவரிடம் கூறவில்லை. முனிவர் கொடுத்த கனியை முழுமையாக ஒருத்திக்குக் கொடுக்காமல் இரண்டாகக் கூறு செய்து இருமனைவியர்க்கும் கொடுத்துவிட்டான் அவன்.

அறியாமையால் அவன் செய்த இந்தக் காரியம் விபரீதமான வினையை உண்டாக்கிவிட்டது. குழந்தை பிறக்கின்ற காலத்தில் இரு மனைவியரும் ஆளுக்குப் பாதி உடலாகத் தனித் தனிக் கூறுகளை ஈன்றெடுத்தனர். இம்மாதிரித் தனித்தனி முண்டங்களாகக் குழந்தை பிறந்தது என்ன விபரீத நிகழ்ச்சிக்கு அறிகுறியோ என்றஞ்சிய பிருகத்ரதன் இரவுக்கிரவே யாரும் அறியாமல் அவைகளை நகரின் கோட்டை மதிலுக்கு அப்பால் தூக்கி எறியும்படி செய்துவிட்டான். இரவின் நடுச்சாமத்தில் ‘சரை’ என்ற அரக்கி கோட்டை மதிற்புறமாக வரும் போது இந்த உடற்கூறுகளை எடுத்து ஒன்று சேர்த்துப் பார்த்திருக்கிறாள். என்ன அதிசயம்! உடல் ஒன்று சேர்ந்ததோடல்லாமல் குழந்தை உயிர்பெற்று அழத்தொடங்கியது. அவள் உடனே குழந்தையை மன்னன் பிருகத்ரதனிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். ‘சரை’யால் ஒன்று சேர்க்கப்பட்ட குழந்தையாகையால் சராசந்தன் என்ற பெயர் இவனுக்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவன் பட்டத்துக்கு வந்ததும் பேரரசர்களை எல்லாம் வெல்லும் மாவீரனாக விளங்கினான். இன்று வீமனால் அழிந்தான்.” கண்ணபிரான் இவ்வாறு சராசந்தனுடைய வரலாற்றைக் கூறி முடித்ததும் அவர்கள் சராசந்தனின் புதல்வனைக் கண்டு அந்த நாட்டை ஆளும் உரிமையை அவனுக்கே கொடுத்துவிட்டு இந்திரப் பிரத்த நகரத்துக்குத் திரும்பினார்கள். சில நாட்களில் இந்திரப் பிரத்த