பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அறத்தின் குரல்

அகங்காரத்தால் கொழுத்த உள்ளம் படைத்த சிசுபாலன் கண்ணபிரானையே எதிர்த்து இழிவான வார்த்தைகளைப் பேசத் தொடங்கினான். அவையிலிருந்த பெரியோர்கள் அவன் சொற்களைக் கேட்டு மனங் கூசி நாணினர்.

“அறிவு, திரு, ஆற்றல் மூன்றிலும் சிறந்த பேரரசர்கள் பலர் இந்த அவையில் கூடியிருக்கின்றனர். மன்னாதி மன்னர்களாகிய அவர்களுக்கு இல்லாத தகுதி கண்ணனிடம் எந்த வகையில் இருக்கிறது? கேவலம்! மாடு மேய்க்கின்ற குலத்திலே பிறந்த கண்ணன் முதல் வழிபாடு பெறுவதென்றால் அது நம்மை எல்லாம் அவமானப்படுத்துவது போல் அல்லவா தோன்றுகிறது? வழிபடும் முதன்மையோ, தகுதியோகண்ணனுக்கு இல்லை. ஆகவே கண்ணனுக்கு முதல் வழிபாடு செய்யக் கூடாது. செய்தால் என் போன்றவர்களின் கோபத்தைக் கிளறிவிடும் காரியமாகவே அது அமையும். அரச மரபிலே உயர்ந்தவர்களாகிய சூரிய வம்சத்தினரும் சந்திரவம்சத்தினரும் இங்கு நிறையக் கூடியிருக்கிறார்கள். அவர்களில் எவருமே இந்த வழிபாட்டிற்குத் தகுதியில்லா தவர்களா? கண்ணனுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது? இவன் தன் வாழ்வில் செய்திருக்கும் இழிந்த செயல்களை விரல் விட்டு எண்ண முடியுமா? ஆயர்பாடியில் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் வெண்ணையையும் நெய்யையும் பாலையும் தயிரையும் திருடி உண்டான். இளம் பெண்களுடன் தகாத முறையில் நெருங்கிப் பழகினான் தான் பிறந்த வேளையின் தீமையால் தன்னைப் பெற்றவர்களையே சிறைவாசம் செய்யும்படி ஆக்கினான். ‘கம்சன் தனக்கு மாமனாயிற்றே’ -என்றும் பாராமல் அவனைக் கொன்று அழித்தான். இன்னும் எத்தனையோ பேர்களைக் கொன்றும் துன்புறுத்தியும் இவன் செய்த தீமைகள் எண்ணற்றவை. இத்தகையவனுக்கா வழிபாட்டில் முதன்மை கொடுப்பது? இதில் நியாயத்திற்கு சிறிதும் இடமில்லையே!” சிசுபாலன் ஆத்திர வெறியினாலும் பொறாமையாலும் குமுறும் இதயத்திலிருந்து சொற்களை வாரி இறைத்தான்.