பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

147

பொறாமையை வளர்ப்பதற்கு மற்றொருவரும் கூடிவிட்டால் கேட்க வேண்டுமா?

“இப்பொழுது நடந்த இந்த இராசசூய வேள்வியால் தருமனும் பாண்டவர்களும் அடைந்தாற் போன்ற புகழை வேறெவர் அடைய முடியும்? ஏற்கனவே சாந்த குணம் ஒன்றுக்காக மட்டும் அந்தப் பேதை தருமனைப் புகழ்ந்து கொண்டிருந்த இந்த உலகம் இனி அவனைத் தன்னிகரில்லாத் தலைவனாகக் கொண்டாடத் தொடங்கிவிடும். மன்னருலகில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற பெருமையை அவன் அடைந்து விடுவான். வீரத்திலும் ஆண்மையிலும் சிறந்தவர்களாகிய நாம் இனியும் தருமனின் புகழ் ஓங்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது” -கர்ணன் இவ்வாறு துரியோதனன் மனத்தில் நெருப்பை மூட்டினான். இந்தப் பொறாமை நெருப்பு அந்தத் தீயவன் மனத்தில் நன்றாகப் பற்றி எரியத் தொடங்கிற்று.

“கர்ணா! இந்திரப்பிரத்த நகரத்திலிருந்து திரும்பிய நாள் தொடங்கி என் மனமும் இதே சிந்தனையில்தான் அழுந்தி நிற்கிறது. பாண்டவர் புகழை இதே நிலையில் வளரவிட்டுக் கொண்டு போவது நமக்கு ஆபத்து. அவர்கள் வாழ்வின் சீரையும் சிறப்பையும் கெடுக்க ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து தான் ஆக வேண்டும்” என்று கர்ணனுக்கும் மறுமொழி கூறினான் துரியோதனன். இப்படிக் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடலைக் கேட்ட சகுனியும் தன் சொந்தப் பொறாமையை வெளிப்படுத்துவதற்கு அந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான். அவனும் அவர்கள் பொறாமையைப் பெருக்குவதில் பங்கு கொண்டான்.

“அரசே! இந்தப் பாண்டவர்கள் நம்மைவிடப் பலசாலிகளாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவர்களை அளவுக்கு மீறி உலகம் புகழ்வதை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. சிங்கம் குகையிலே பதுங்கிக்