பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

அறத்தின் குரல்


சென்று “உன் அரசும் உடைமைகளும் எங்களுக்கு வேண்டும்” -என்று யாசித்தால் மறு பேச்சின்றி உடனே கொடுத்து விடுவானே! எதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சிகளைச் செய்து உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்திற்கும் களங்கத்தைத் தேடிக் கொள்கிறீர்கள்? இப்படிச் செய்தால் பிறநாட்டு மன்னர்களும் சான்றோர்களும் உங்கள் பண்பைப் பற்றி எவ்வளவு இழிவாக நினைப்பார்கள்? சூதாடி அடைகின்ற வெற்றி புகழுக்கும் பெருமைக்கும் மாசு அல்லவா? வேண்டாம் இந்தப் பழி! வேண்டாம் இந்த சூழ்ச்சி! பொறாமையைக் கைவிட்டு நேரிய வழியில் வாருங்கள்” -விதுரன் மனம் உருகும்படியான முறையில் துரியோதனனை நோக்கி இவ்வாறு அறிவுரை கூறினார். எரிந்து நீராய்ப் போன சாம்பலிலிருந்து சூடு, புகை தோன்றுவதில்லை. துரியோதனனுடைய நெஞ்சத்தில் அறிவு சூன்யம், பண்பும் சூன்யம். நேர்மை, நீதி, நியாயம் ஆகிய எண்ணமும் அவன் மனத்தில் தலைகாட்டியது இல்லை. விதுரனுடைய அறிவுரை இத்தகைய தீமை நிறைந்த ஒரு மனத்தில் எப்படி நுழைய முடியும்? உண்மையை எடுத்துரைத்த அந்த அறிவுரையை அவன் ஏளனம் செய்தான். அவனுடைய மனமும் ஏளனம் செய்தது.

4.விதுரன் செல்கிறான்

நல்லவர்கள் உள்ளன்போடு கூறினாலும் அந்த அறிவுரை தீயவர்களின் மனத்தோடு பொருந்துவதில்லை. தண்ணீரில் எண்ணெய் கலப்பதில்லையல்லவா? விதுரன் கெளரவர்களுக்குக் கூறிய அறிவுரையும் இதே கதியைத்தான் அடைந்தது. அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அதைக் கூறிய விதுரன் மேல் அவன் அளவற்ற ஆத்திரம் அடைந்தான். “நீ சிறிதும் நன்றியில்லாதவன்! கெளரவர்கள் ஆதரவில் வாழ்ந்து கொண்டே பாண்டவர்களுக்காகப்