பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

155


“மகனே! சரியான காரியம் செய்தாய்? படை திரட்டிப் போர் முனையில் நேருக்கு நேர் நின்று எதிர்த்தாலும் பாண்டவர்களை உங்களால் வெற்றி கொள்ள முடியாது. எனவே சூதாட்டத்தினால் வெல்வதே முடியும். இந்த அரிய திட்டத்தைச் சகுனிதான் உங்களுக்குக் கூறியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சகுனிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!” என்று இவ்வாறு வாழ்த்தினான் திருதராட்டிரன்.

இந்த நல்ல சமயத்தைக் கைவிட விரும்பாத துரியோதனன், “தந்தையே! பாண்டவர்களை இந்திரப் பிரத்த நகரத்திலிருந்து மண்டபம் காண அழைத்து வர வேண்டும் அல்லவா? அந்த அழைப்பை மேற்கொண்டு செல்லத்தக்க தூதுவர் விதுரர் தாம் ! ஆகவே அவரையே தூதுவராக அனுப்பிவிடுங்கள்!” -என்றான்.

விதுரனுக்குப் பிடித்தமில்லாத காரியத்தில் அவனை ஈடுபடுத்தி, துன்புறுத்திப் பார்க்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை ! அந்த ஆசையும் அடுத்த விநாடியிலேயே நிறைவேறியது. திருதராட்டிரன் ஒரு பணியாளைக் கூப்பிட்டு விதுரனை அழைத்துக் கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். சில நாழிகைப் போதில் விதுரன் திருதராட்டிரனுக்கு முன்பு வந்து வணங்கி நின்றான்.

“விதுரா ! இந்திரப்பிரத்த நகரத்திற்குச் சென்று இங்கே கட்டியிருக்கும் புதிய மண்டபத்தைக் காண்பதற்காகப் பாண்டவர்களை அழைத்து வரவேண்டும். அதற்கு உன்னைத் தூதுவனாக அனுப்புகிறேன்!” -திருதராட்டிரனின் இந்தச் சொற்கள் நெருப்புக் கங்குகள் போல விதுரன் செவியிற் புகுந்து மனத்தைச் சுட்டன. அவன் மிகவும் வெறுத்த சூழ்ச்சி எதுவோ அதை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு அவனே கருவியாக இருப்பதா? மனச்சான்று வதைத்தது. இதற்கு இணங்காமலிருந்து விட்டால் என்ன?’ -என்று நினைத்தான். ஆனால் திருதராட்டிரன் அழைப்பையும் தூதுத்திரு