பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அறத்தின் குரல்

நல்லாப்பிள்ளை அவற்றுடன் கலந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களும் சேர்ந்த மொத்தத் தொகுதிக்கே நல்லாப்பிள்ளை பாரதம் என்று பெயர். நல்லாப்பிள்ளையின் ஒருசாலை மாணாக்கராகிய முருகப்பிள்ளை என்பவர் பாடிய பாடல்களும் இதில் கலந்துள்ளன என்பது சிலர் கருத்து. இவர்களுக்கெல்லாம் பிற்காலத்திலே நம்முடைய தலைமுறையில் வாழ்ந்து மறைந்த வரகவியாகிய பாரதியார் முற்றிலும் புதியதொரு நோக்குடன் பாரதத்தின் ஒரு பகுதியைக் காவிய அமைப்புடன் தமிழில் படைத்தார். சூதாட்டம், அதில் திரெளபதியையும் தன்னையும் தம்பியரையும் தன் உடைமைகளையும் தருமன் இழந்து போவது ஆகிய இந்நிகழ்ச்சிகளே குருட்சேத்திர யுத்தத்துக்குக் கால்கோளென்பதை நன்கறிந்தவராகிய பாரதியார் ‘பாஞ்சாலி சபதம்’ என்று தம் காவியத்திற்கு மகுடமிட்டுக் கொண்டார். பாஞ்சாலியின் சபத மொழியையே தமது புதுக்காவியத்தின் மையப் பொருளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் கவியரசர் பாரதியார். வில்லி பாரதத்தில் சபாபருவத்தில் விவரித்த செய்திகளையும் பாரதக் கதையின் இயற்கையான முடிவையும் இணைத்து இடப்பட்ட தலைப்பிற்கும் பொருத்தமாகப் பாஞ்சாலி தன் சபதத்தை நிறைவேற்றிக் கூந்தலை முடித்துக் கொள்வதோடு காவியத்தை முடிவு செய்து விடுகின்றார். சுருக்கமான காவிய அமைப்பாலும், பாரதியாரது ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் நடையும் காவியப் பாத்திரங்களின் குணசித்திர வரம்பும் சிறந்து விளங்குவதாலும், தமிழிலுள்ள பாரதக் கதைகளில் தனக்கென ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுவிட்டது பாஞ்சாலி சபதம். பாரதம் ஐவராகிய பாண்டவர்களின் வாழ்க்கையை பேசும் காவியம் என்று கண்டோம். இதில் ஒரு சிறப்பான ஒற்றுமை இயற்கையாகவே அமைந்து சிறப்பளிக்கிறது பாருங்கள். பாரதத்திற்கு பாண்டவர் ஐவரே போலத் தமிழில் பாரதக் கதையை இயற்றிய காவிய ஆசிரியர்களும் ஐவர்தாம். சங்க காலத்தினரான பெருந்தேவனார் முதல் இருபதாம்