பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

165

காக எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கின்றது?’ -தருமனுடைய எண்ணங்கள் சுழித்துச் சுழித்து வளைந்தன. அதுவரை மேகக் கூட்டங்களின் கருமைப் பிடியில் சிக்கியிருந்த சந்திர பிம்பம் மெல்ல வெளிப்பட்டது. அந்த முழுமதி வடிவத்தையும் அதனிடையே தென்பட்ட சின்னஞ்சிறு களங்கத்தையும் தருமன் ஊன்றி நோக்கினான், ‘ஆகா! என் வமிசத்தைச் சேர்ந்த துரியோதனன், எண்ணற்ற தீமைகளையும், சூழ்ச்சிகளையும் செய்யப்போகிறான். அவனைத் தடுக்க நான் எழுந்துள்ளேன்’ என்று அந்தச் சந்திரபிம்பம் வாய் திறந்து பேசுவது போலிருந்தது. இன்னும் என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபின் தருமன் உறங்கச் சென்றான்.

விதிக்கு வெற்றியும் பாண்டவர்களுக்குச் சோதனையும் எடுத்துக் கொண்டு வருவது போல மறுநாளும் வந்தது. பாண்டவர்கள் நீராடல் முதலியவற்றைச் செய்து முடித்துக் கொண்ட பின் துரியோதனாதியரின் புதிய மண்டபத்தைக் காணச் சென்றனர். செல்வதற்கு முன்னால் அறம் செய்வதையே தன் இயற்கைக் குணமாகக் கொண்ட தருமன், ஏழை எளியவர்களுக்குப் பலவகைத் தான தருமங்களைச் செய்திருந்தான். இதற்குள் துரியோதனனே பாண்டவர்களை அழைத்து வருவதற்காகப் பிராகாமி என்ற தேர்ப்பாகனை அனுப்பி விட்டான். அவனுக்கும் கர்ணன், சகுனி முதலியவர்களுக்கும் “எப்படியும் இன்று பொழுது மறைவதற்குள்ளே பாண்டவர்களை வெறுங்கையர் களாக்கிவிட வேண்டும்” என்ற வைராக்கியம், தீமை நிறைந்த இந்த வைராக்கியத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அன்று காலை விரைவாகவே அரசவைக்கு வந்திருந்தனர் அவர்கள். மண்டபம் காணச் செல்வதற்கு முன்னால் திரெளபதியைக் காந்தாரியிடம் போய் இருக்குமாறு அனுப்பிவிட்டனர் பாண்டவர்கள். துரியோதனாதியர்களும் மற்றவர்களும் புதிய மண்டபத்திலேயே வந்து கூடியிருந்தனர். பாண்டவ சகோதரர்கள் மண்டபத்திற்குள் நுழைந்ததும்