பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அறத்தின் குரல்

திருதராட்டிரன், வீட்டுமன், விதுரன் முதலிய பெரியோர்களை வணங்கினர். மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க அவர்களை அழைத்துச் சென்றனர். துரியோதனன் முதலியோர். எல்லா வகையிலும் உயர்ந்த பொருள்களைக் கொண்டு உயர்ந்த முறையில் உருவாக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தின் அழகு பாண்டவர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. தருமன் அதனைப் புகழ்ந்து கெளரவர்களிடம் கூறி அவர்களைப் பாராட்டினான்.

மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தபின் எல்லோரும் அங்கு இருந்த அவையில் வந்து முறைப்படி அமர்ந்தார்கள். அமர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் துரியோதனன் ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ - என்றெண்ணியவனாகத் தன் சூழ்ச்சி வலையை விரித்தான்.

“உணவு கொள்வதற்கு இன்னும் மிகுந்த நேரமாகும். அதுவரை நாம் இங்கே பொழுது போகாமல் வெறுமனே உட்கார்ந்து கொண்டுதானே இருக்கப் போகின்றோம்! பொழுது போக்காக கொஞ்ச நேரம் சூதாடினால் என்ன?” என்று துரியோதனன் தருமனைப் பார்த்துக் கேட்டான்.

“அறநெறிக்கு முரண்பட்ட குணங்களில் இந்தச் சூது மிகக் கொடியது. ‘இதனைப் பொழுதுபோக்காக விளையாடலாம்’ என்று நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். வேண்டாம்! என்னால் உங்களுடைய இந்த வேண்டுகோளுக்கு இணங்க முடியாது. சூதாடி அதில் வெற்றி பெற்று அதன் மூலம் என்னிடம் எந்தப் பொருளை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை இப்போதே கேளுங்கள். சிறிதும் தயங்காமல் கொடுத்து விடுகிறேன்” -என்றான் தருமன். தீமைக்கு இணங்க மறுக்கும் உறுதியும் ஆவேசமும் அவனுடைய கம்பீரமான குரலிலிருந்து வெளிப்பட்டன. துரியோதனன் தனக்குள், ‘தருமன் சம்மதிக்காமல் போய் விடுவானோ?’ என்று அஞ்சினான். ஆனால் மறுகணமே சகுனியின் பேச்சு அவனுடைய பயத்தைப் போக்கியது!