பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆரணிய பருவம்

1. விசயன் தவநிலை

எங்கு நோக்கினும் பசுமைக் கோலம் பரப்பி நிற்கும் மரக் கூட்டங்கள். சந்தன மரங்கள் ஒரு புறம் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. மலர்களின் நறுமணம் அகிற்கட்டைகளின் வாசனையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தன. மலைச்சாரலைச் சேர்ந்த காடு அது. காமிய வனம் என்று பெயர். தமலைச் சிகரங்களில் அருவிகளாகப் பாய்ந்து கீழே கலகலவென்று சிற்றாறாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் ஓடைகளும், குளிர்ந்த சுனைகளும் மிகுந்திருந்தன. ஆழமாகவும், அகலமாகவும் அமைந்திருந்த சுனைகளின் நீல நிற நீர்ப் பரப்பில் கரிய யானைகள், கூட்டம் கூட்டமாக நீராடிக் கொண்டிருந்தன. வெயிலே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்த மரங்களில் காய்கனிகளை உணவுக்கு நல்கும் பயன் மரங்களும் நிறைந்திருந்தன. அத்தினாபுரத்திலிருந்து வனவாசத்திற்காகப் புறப்பட்ட பாண்டவர்கள் இத்தகைய சிறப்புகளெல்லாம் பொருந்திய காமிய வனத்தில் வந்து முதன் முதலாகத் தங்கினார்கள். பாண்டவர்களோடு உறவினர்களிற் சிலரும் முனிவர்களும் உடன் வந்திருந்தனர். கங்கை முதலிய புனிதமான நதிகள் தோன்றும் இமயமலையின் வளமிக்க சாரலைப் போல் அந்தக் காமிய வனத்தின் இயற்கையழகும் சிறப்புற்று விளங்கியது. பாண்டவர்கள் வந்து தங்கியதால் அந்த வனத்திற்கே ஒரு தனிப்பெருமை ஏற்பட்டு விட்டதைப் போலிருந்தது.

இதற்குள் பாண்டவர்கள் அரசைத் துறந்து வனவாசம் புறப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி பல இடங்களில் பரவியிருந்தது, பாஞ்சால வேந்தன் துருபதன் முதலிய பெருமன்னர்களும் பிறரும் செய்தியறிந்து வருந்தினர். பாண்டவர்களை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிப்பதற்