பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

205

பெருமிதமும் கலந்திருந்தது. இறுதிச் சோதனையாகத் தானே நேரில் புறப்பட்டுச் சென்று வரலாம் என்றெண்ணினான். வயது முதிர்ந்த முனிவர் ஒருவர் போன்ற தோற்றங்கொண்டு புறப்பட்டான் இந்திரன். இமயமலைச் சாரலில் அர்ச்சுனன் தவஞ் செய்துகொண்டிருந்த இடத்தை அடைந்தபோது அவனிருந்த நிலையைக் கண்டு இந்திரனே திகைத்து விட்டான். வைராக்கியத்தின் அர்த்தம் அவனுக்கு விளங்கியது. இந்திரன் தவத்திலிருந்த அர்ச்சுனனை விழிக்கச் செய்து எழுப்பி, “நீ யார் அப்பா? எதற்காக இப்படிக் கடுந்தவம் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமானைப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கடுந்தவம் என்று அர்ச்சுனன் பதில் கூறினான்.

“அது உன்னால் முடியாது இளைஞனே! வீணாக ஏன் பயனற்ற இந்தத் தவமுயற்சியில் நேரத்தைக் கழிக்கிறாய்?”

“எனக்கு முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனால் முயல்கிறேன். அதைத் தடுக்க நீ யார்?”

“அதற்குச் சொல்லவில்லை அப்பா! சிவபெருமான் தேவர்களுக்கும் வேதங்களுக்குமே தோற்றங் கொடுக்காதவர் ஆயிற்றே? அப்படிப்பட்டவர். கேவலம் சாதாரணத் தபஸ்வியாகிய உனக்கு எப்படிக் காட்சி கொடுப்பார்?”

“கொடுப்பார் கொடுக்கத்தான் போகிறார். உம்முடைய உபதேசம் தேவையில்லை. நீர் போகலாம்” இந்திரன் தனக்குள் அர்ச்சுனனுடைய உறுதியை எண்ணிச் சிரித்துக் கொண்டான். அவனுடைய திண்மை அதியற்புதமாகத் தோன்றியது. தனது சொந்த உருவத்தை அர்ச்சுனனுக்குக் காட்டினான் இந்திரன். அர்ச்சுனன் முறை கருதி மரியாதை அளித்து இந்திரனை வணங்கினான். தன்னுடைய தவ உறுதியை மட்டும் கைவிடவேயில்லை.

“அர்ச்சுனா! உன் உறுதி எனக்கு வியப்பைக் கொடுக்கிறது. நான் அதனைப் பாராட்டுகிறேன். உன் தவம்