பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

19

கண்டோம். இனிக் காவியக் கருத்துக்கு எதிரிடையாகவும் பகைப்புலனுக்கு உடன்பாடாகவும் நிற்கும் துரியோதனன் முதலிய பாத்திரங்களைப் பற்றிக் குண அமைப்பு முறையை அறிந்து கொள்ள முற்படுவோம். இருளில் கொண்டு போனால் தானே விளக்கு ஒளியைக் கொடுக்கும். வேறோர் விளக்கு இருக்கும் இடத்திற்கோ, அல்லது பகல் நேரத்திலோ, விளக்கின் ஒளி எடுத்துத் தோற்றாது அல்லவா? இதே போலத்தான் காவியத்தில் நேர்புலனும், பகைப்புலனும். இரண்டுமே நேர் புலனாக இருந்துவிடுமானால் ஒளிக்கு முன் ஒளிபோல விளக்கமிழந்து போகும். பாண்டவர்களைப் போலவே கெளரவர்களையும் படைத்திருந்தால் பின் ‘பாரதம்’ என்ற இந்தக் காவியந்தான் ஏது? கதைதான் ஏது? பாண்டவர்களுக்கு நேரிய அறத்தையும் வீரத்தையும் குணமாக்கிக் கௌரவர்களுக்குப் போலி வீரத்தையும், பொய்மையையும் குணமாக்கியதனால்தானே பாரத காவியத்தை அடைய முடிந்தது? துரியோதனனை அறிவும் சிந்தனை வளமும் உடைய ஒருவனாகக் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. தீயவனாயினும் அறிவும் சிந்தனை உள்ளவனாக இருந்திருக்கலாம் அல்லவா? தெளிவற்ற அறிவோடு தகுதியற்ற செயல்களைச் செய்வதற்குத் தயங்காத ஒரு மனநிலையை அவனிடம் காண்கின்றோம். பிறர் காட்டும் தவறான வழிகளில் சென்று விடுகின்ற அளவு பலவீனமுடையது அவன் அறிவு. இல்லையென்றால், சகுனி முதலியவர்கள் கருத்தை அப்படியே ஏற்று அதன்படி நடக்கின்றவரை சிந்திக்கும் திறமின்றிக் கழிந்திருக்குமா அவன் மனம்? சூழ்ச்சியும், வஞ்சகமும், தீமையும் புரிகின்ற இறுக்கமான மனத்திடமும் சொந்தமாக அவனிடம் இல்லை. சூழ்ச்சி முதலிய தீய பண்புகள் அவனை ஒரு வெறுங்கருவியாகப் பயன்படுத்திக்கொண்டு பாண்டவர்களைத் துன்புறுத்தின என்றே கூறுதல் தகும். சகுனி முதலிய தீயோர் அதை வற்புறுத்தித் தூண்டும் துணைக் கருவிகளாக இருந்தார்கள். ஆகவே அறிவுத் தெளிவற்ற சிந்தையும்