பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

அறத்தின் குரல்

அடக்கமே உருவாக வீற்றிருக்கும் இந்த இளைஞரைச் சாதாரண மானிடர்களில் ஒருவனாக எண்ணி விடாதீர்கள். இவன் பாண்டவ சகோதரர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன். இவனுடைய வீரத்தையும் போர் செய்கின்ற ஆற்றலையும் அளவிட்டுச் சொல்லவே முடியாது. நானும் என்னுடைய மேகப் படைகளும் சேர்ந்து தடுத்தும் கூட காண்டவ வனம் எரியும்போது அதை அவிக்க விடாமல் எங்களை எதிர்த்துப் போர் செய்தவன் இவன் தான். இவனுடைய வீரத்திற்கு வானுலகப் பெருமக்களின் சார்பில் நாம் நன்றி செலுத்த வேண்டும்” என்று கூறிக் கற்பகப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றை அர்ச்சுனனுக்குச் சூட்டினான் இந்திரன்.

மற்றும் பல தேவர்கள் அர்ச்சுனனை மனமகிழ்ச்சியோடு பாராட்டிப் பலவகை அன்பளிப்புகளை வழங்கினர். அன்று இந்திரனும் அர்ச்சுனனும் அருகருகே அமர்ந்து உணவுண்டனர். அதனைக் கண்ட இந்திரனின் கோப்பெருந்தேவியாகிய இந்திராணி அசூயையும் சினமும் கொண்டாள். “ஒரு மண்ணுலகத்து மானிட இளைஞனை வானுலக மன்னராகிய நீங்கள் அருகே அமர்த்திக் கொண்டு உண்பது தகுதியுணராத செயல்” என்று அவள் கூறினாள். இந்திரன் இவ்வாறு கூறிய தன் மனைவியை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே சமாதானமாக விடை கூறலானான்.

“அரசீ! இவனை மானிடனென்று தாழ்வாகப் பேசாதே! உண்மையில் இவன் தேவர்களைவிடப் பன்மடங்கு உயர்ந்தவன். எனக்கு மகன் முறையுடையவன். எல்லாம் வல்லமாயனாகிய கண்ணபிரானுக்கு மைத்துனன், உலகத்தின் சம்ஹாரகர்த்தாவாகிய சிவபெருமானுடனேயே துணிந்து எதிர்த்துப் போர் செய்தவன்” என்று கூறி இந்திராணிக்கு அர்ச்சுனனுடைய தகுதியை உணருமாறு அறிவுறுத்தினான். பெரிய வில்லாளனும் தெய்வீகக் கண்ணனுக்கு மைத்துனனுமாகிய அர்ச்சுனனுடைய வரவினால் தேவலோகத்துக்கு ஏதாவது பெரிய நன்மை ஏற்படலாம் என்று தேவர்கள் கருதினர். ஒரு நாள் இந்திரனும் அர்ச்சுனனும் தனியே