பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

219

தேருக்கருகில் நெருங்கி ஒரேயடியாகத் தேரை அமுக்கிக் கொன்று விட வேண்டும் என்று ஆக்ரோஷமடைந்தனர். அந்த எழுச்சியின் வேகத்தைத் தவிடுபொடியாக்குவதைப் போல அர்ச்சுனன் பிரம்மாஸ்த்ரத்தை எடுத்துச் செலுத்தினான். சக்திவாய்ந்த அந்த அஸ்திரத்தின் விளைவாக அசுரர்களில் பெரும் பகுதியினர் உயிரிழந்தனர். எஞ்சியிருந்தவர் அவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ச்சுனனும் கை ஓயாமல் வில்லிலிருந்து கணைமழை பொழிந்து கொண்டிருந்தான். நிவாதகவசர்கள் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே இருந்தனர். நல்லவர்களுடைய செல்வம் வளர்வது போல அர்ச்சுனனுடைய ஆற்றல் பெருகியது. வஞ்சகர்களின் செல்வம் அழிவது போல நிவாதகவசர்களுடைய ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது.

ஆயிற்று. எல்லா அசுரர்களும் ஏறக்குறைய அழிந்து விட்டனர். இன்னும் சில நூறு பேரே எஞ்சியிருந்தார்கள். அர்ச்சுனன் மனமகிழ்ச்சியோடு அவர்களையும் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் திடுக்கிட்டு மலைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. என்ன மாயமோ? சூனியமோ? திடீரென்று செத்தும் உடல் சிதைந்தும் கிடந்த எல்லா அசுரர்களும் உயிர் பெற்று எழுந்து போருக்கு வந்தார்கள். இறந்தவர் பிழைத்து எழுந்து வரும் அந்த விந்தையைக் கண்டு அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் அவனைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் திடீர்த்தாக்குதல் அவனை தன்னம்பிக்கை இழக்கச் செய்து விட்டது. அவன் சோர்ந்து போய் நின்றான். ஆசரிரீயாக ஒரு குரல் அவனுக்கு அந்த நிலையில் ஊக்கமளிக்கும் அருமருந்து போல் செவிகளில் நுழைந்தது.

“பாசுபதாஸ்திரத்தைப் பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.”

அர்ச்சுனன் உடனே, தவமிருந்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துத் தொடுத்தான்.