பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

225

இடத்துக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனார். கைலாயமலையின் அடிவாரத்தில் அர்ச்சுனனை முகாசுரன் கொல்ல வந்தது, சிவபெருமானும் உமாதேவியும் வேடனும் வேட்டுவச்சியுமாக வந்து காத்தது, சிவபெருமான் சோதனைக்காக அர்ச்சுனனோடு போர் செய்தது, ஆகிய நிகழ்ச்சிகளை உரோமேசரிடம் கேட்டு அறிந்து கொண்டார்கள் தருமன் முதலியோர்.

தீர்த்தங்களையும் தலங்களையும் கண்டு பல இடங்களுக்குப் பிரயாணம் செய்த பின்னர் கைலாயமலைச் சிகரத்திற்கு மிகவும் அருகிலுள்ள காந்தருப்பம் என்ற மலைப்பகுதிக்கு வந்து தங்கினார்கள். இயற்கை வளமும் நல்வினைப்பயனும் மிகுந்த அந்த இடத்தில் அவர்களும் உரோமச முனிவரும் ஒரு வருஷ காலம் வசித்து வந்தனர். அவ்வாறிருக்கும்போது வீமன் தன்னுடைய வீரத்தை வெளிபடுத்தும்படியான வாய்ப்பு ஒன்று ஏற்பட்டது. ஒரு நாள் திரெளபதி காந்தருப்ப மலைப்பகுதியிலிருந்த அழகிய பூம் பொழில் ஒன்றின் இடையே உலாவிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வானிலிருந்து பொன் போலும் நிறத்தை உடைய தாமரைப்பூ ஒன்று அவள் முன் விழுந்தது. கண்ணைக் கவரும் அழகும் நாசியை நிறைக்கும் இனிய மணமும் பொருந்திய அந்த மலரை அவள் கையில் எடுத்தாள். ஆர்வம் தீர நுகர்ந்து பார்த்தாள். அம் மாதிரி மலர்கள் பலவற்றைத் தன் கரங்களில் வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அவள் அந்த மலரை வீமனிடம் கொண்டு போய்க் காட்டினாள்.

“இது போல் அருமையான மலர்கள் சிலவற்றை நீங்கள் எனக்குக் கொண்டு வந்து கொடுக்க முடியுமா?” -என்று வீமனைக் கேட்டாள். வீமன் அவள் வேண்டுகோளுக்கு இணங்கினான். ஆனால் அத்தகைய மலர்களை எங்கிருந்து பெறலாம் என்பது தான் அவனுக்கு விளங்கவில்லை. ‘உரோமேசருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்றெண்ணி அவரிடம் கொண்டு போய்க் காட்டினான்.

அ.கு. -15