பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

23

நேரவில்லை. ஆகையால்தான் குணங்களால் தீமையற்ற, நன்மகளாக இருந்தும் இவளுடைய குணம் சிறப்பாகத் தோன்றுவதற்குரிய வாய்ப்பு இல்லாமலே கழிந்துவிட்டது. வஞ்சகக் கலப்பில்லாத தூய்மையான வெள்ளையுள்ளமும், பிறருக்குத் தீமை நினையாத எண்ண நலமும் பெற்றிருந்தும் இவளுடைய நலம் பெரிதும் பாராட்டிச் சித்திரிக்கப்பட படாமைக்கு இதைத் தவிர வேறெந்தப் பெரிய காரணமும் கூறுவதற்கில்லை. எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம். துரியோதன மன்னன் அரண்மனையில் இல்லாத ஒரு பொழுதில் அவன் மனைவி பானுமதி துரியோதனனுக்கு நெருங்கிய நண்பன் என்ற முறையுரிமை கொண்டு கர்ணனோடு சொக்கட்டான் விளையாடிக் கொண்டி ருந்தாள். விளையாட்டில் தன்னை மறந்து இலயித்துப் போய் ஈடுபட்டிருந்த கர்ணன் சிறிது நேரத்தில் துரியோதனன் அங்கே வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை . ஆனால் துரியோதனன் உள்ளே வருவதை அவன் மனைவி பானுமதி கண்டு கொண்டாள். கண்டவுடன் கணவனுக்குச் செய்ய வேண்டிய மரியாதை முறைப்படி எழுந்து நின்றாள். திடீரென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு அவள் எழுந்து நின்றது கண்ட கர்ணன் அவள் எதற்காக எழுந்து நிற்கிறாள் என்ற காரணம் விளங்காமல் மனத்தில் தவறாக எண்ணிக்கொண்டு அவளை உட்காரச் செய்யும் கருத்துடன் விளையாட்டு வெறியில் அவளைத் தொட்டு மேகலையைப் பற்றி இழுத்து உட்காரச் செய்து விட்டான். துரியோதனன் இதற்காகக் கர்ணனை மன்னித்து விட்டதோடு இதை ஒரு பெருங்குற்றமாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதைப் பாரதம் விவரிக்கிறது. இந்நிகழ்ச்சியில் துரியோதனனுடைய பெருந்தன்மைக்கும் மேற்பட்ட பெருந்தன்மையாகப் பானுமதியின் சிறந்த கற்பு நிலையே விளக்கம் பெறக் காண்கின்றோம். இன்னும் சுபத்திரை, சித்திராங்கதை, இடிம்பி முதலிய வேறு பல பெண் பாத்திரங்களும் அக்காவியத்தின் ஓரோர் பகுதியில் பயின்று செல்கின்றனர். அருச்சுனனைக் காணாமலே அவனை எண்ணி