பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

249

மனக்கருத்தை அவர் கண்டாரா? பாவம்! மனம் மகிழ்ந்தார். சகுனியின் மூலமாகத் துரியோதனன் அவரிடம் ஒரு வரம் கேட்டான்.

சகுனி முனிவரிடம், “முனிவர் பெருமானே! துரியோதனனுடைய விரோதிகளை அழிப்பதற்கு நீங்கள் உங்கள் தவ வலிமையினால் உதவவேண்டும்” என்று குறிப்பை மறைத்துக் கொண்டு நல்லது போலக் கேட்டான். விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத முனிவர் தமக்கிருந்த மனமகிழ்ச்சியில், “நல்லது துரியோதன்னுடைய பகைவர்கள் எவராக இருந்தாலும் என் உதவியால் நான் அவர்களை ஒழிக்க இணங்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டார்.

உடனே சகுனி, “முனிவரே! அந்த விரோதிகள் வேறெவரும் இல்லை. பாண்டவர்கள் தாம். அவர்களைக் கொல்வதற்காக நீங்கள் ஓர் யாகம் செய்ய வேண்டும்” என்றான். முனிவர் திடுக்கிட்டார். துரியோதனனுடைய வஞ்சகம் அப்போது தான் விளங்கியது. ‘குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல இவனிடம் வாக்களித்து அகப்பட்டுக் கொண்டுவிட்டோமே’ என்று கலங்கியது அவருடைய தூய உள்ளம் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் வழியில்லை. பாண்டவர்களைப் பற்றிய நல்லெண்ணமும் நல்ல நோக்கமும் உடையவராகிய அந்த முனிவர் விதியின் கொடுமையை எண்ணி மனம் புழுங்கினார்.

சகுனியின் வேண்டுகோளை எப்படியாவது மறுத்து விடலாம் என்றெண்ணி “அப்பா! தயவு செய்து வேறு ஏதாவது ஒரு வரம் கேள் நான் பாண்டவர்களை அழிக்க வேள்வி செய்தால் என் புண்ணியமும் தருமமும் ஆகிய யாவும் அழிந்து போய்விடும். நல்லதை எண்ணுங்கள்! நல்லதைக் கேளுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்” என்று உருக்கமாகக் கூறினார். துரியோதனனும் சகுனியும் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டார்கள். அதோடு கூறியதையே மீண்டும் கூறி வற்புறுத்தினார்கள். “நீங்கள் வாக்குக் கொடுத்துவிட்டீர்கள், இனி மாறக் கூடாது. எங்கள் விருப்பப்படியே