பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

அறத்தின் குரல்

வலுவேற்றிக் கொண்டான். தெம்பு தோன்றியதும் எழுந்து நடந்தான். நச்சுக் குளக்கரைக்குச் சென்று சகோதரர்கள் இறந்து கிடந்ததையும் மணலில் எழுதியிருக்கும் எழுத்துக்களையும் கண்டான். எழுதியிருந்ததைப் படித்தவுடன் அந்த நீரைக் குடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். சிறிது நேரம் யோசித்துப் பார்த்ததில், “சகோதரர்கள் எல்லோரும் இறந்த பின் நாம் மட்டும் உயிர் வாழ்வானேன்? இந்த நச்சுப் பொய்கை நீரைக் குடித்து நாமும் உயிரை விட்டுவிட்டால் என்ன?” -என்று தோன்றியது. விநாடிக்கு விநாடி சிந்தனை வளர்ந்தது. சிந்தனை வளர வளர உயிரை விட்டு விடுவதே மேல் என்று தோன்றியது. இந்தத் தீர்மானத்தோடு நீரை அள்ளிப் பருகுவதற்காகக் குளத்தில் இறங்கினான் தருமன்.

“நில் ! இறங்காதே” -தருமன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். குரல் பெரிதாகக் கேட்டது. ஆனால் குரலுக்குரியவர் யார்? எங்கிருக்கிறார்? என்றே தெரியவில்லை. மீண்டும் ‘வீண் பிரமை’ என்று எண்ணிக் கொண்டு இறங்கினான். “நான் சொல்வது கேட்கவில்லை? இறங்கி நீரைக் குடித்தால் இறந்து போவாய் நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். அவைகட்குப் பதில் கூறினால் இறந்து கிடப்பவர்களை உயிர் மீட்டுத் தருவேன். பதில் சொல்வாயா?”

“ஆகா! தாராளமாகப் பதில் கூறுகிறேன். கேள்!” -தருமன் மகிழ்ச்சியோடு இணங்கினான். உருவமில்லாத அந்தக்குரல் கேட்டது.

“நூல்களில் பெரியது எது?”

“அரிய மெய்ச்சுருதி”

“இல்லறத்தை நடத்த அவசியமான பொருள் எது?”

“நல்ல மனைவி”

“மாலைகளில் மணமிக்கது எது?”

“வண்சாதி மாலை”

“போற்றத்தக்க தவம் என்ன?"