பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

265


“பலாயனா! நீ மற்போரில் வல்லவனென்று ஏற்கனவே என்னிடம் கூறியிருக்கிறாய். இப்போது இந்த வாசவமல்லனிடம் உன் திறமையைக் காட்டு, பார்ப்போம்” என்று உத்திரவிட்டான் விராடன்.

விராடனைத் தலைவணங்கிப் போருக்குத் தயாரானான் பலாயனன். “பெரிய பெரிய மல்லர்களையெல்லாம் வென்ற எனக்குக் கேவலம் இந்தச் சமையற்காரன் எம்மட்டு?” -என்றெண்ணி அவன் மேல் தோள் தட்டிக் கொண்டு பாய்ந்தான் வாசவன். பலாயனனுக்கும் வாசவமல்லனுக்கும் கோரமாகப் போர் நடந்தது. புஜங்களும் புஜங்களும் மோதின. கால் காலை இடறியது. மல்யுத்தத்தின் திறமைகளை எல்லாம் காட்டி ஒருவரை ஒருவர் வெற்றிக் கொள்ள முயன்றனர். திமிரும் மனக்கொழுப்பும் கொண்டு போர் புரிந்த வாசவமல்லன் தான் வீரன் என்பதை அவைக்கு விளக்க முயலுவதைப் போலத் துள்ளித் துடித்துப் பலாயன்னைத் தாக்கிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் யாவற்றையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகப் போர் புரிந்து வந்த பலாயனன். திடீரென்று ஆக்ரோஷமடைந்து வாசவனின் இடுப்பிலே ஓங்கி உதைத்து அவனைக் கீழே தள்ளினான். கீழே விழுந்த வாசவனது மார்பில் ஏறி அமர்ந்த பலாயனன் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவனுடைய கழுத்தை வேகமாகத் திருகினான். கழுத்தொடிந்த வாசவமல்லன் இறந்து விழுந்தான். பலாயனன் வென்றான். விராடன் சமையல்காரன் என்றும் பாராமல் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தான். தன்னுடைய ‘ஆஸ்தான மல்லன்’ என்ற கெளரவமான பதவியையும் பலாயனனுக்கு அளித்தான்.

2. கீசகன் தொல்லைகள்

விராட நகரத்தில் பாண்டவர்களும் திரெளபதியும் மாறுவேடமும் மாற்றுப் பெயரும் கொண்டு அமைதியான முறையில்