பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

271

கீசகன் தான் யாரால் தூக்கி எறியப் பட்டோம் என்பதே தெரியாமல் கீழே விழுந்தான். பலர் கூடிய அவை நடுவில் இந்த அநீதியைச் செய்ய முயன்றதற்காகக் கீசகனை விராடனே தண்டித்திருக்கலாம், ஆனால் விராடனுக்கே கீசகனிடம் கொஞ்சம் பயமுண்டு. கீசகன் படைகளுக்குத் தலைவர்னாகையால் அவனை எதிர்த்துக் கொள்வது தனக்கே துன்பமாக முடிந்தாலும் முடியலாம் என்று அஞ்சினான்.

இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்தபோது விராடனுடைய அவைக் களத்தில் மாறுவேடத்தில் கங்கராகவும், பலாயனனாகவும், தருமன், வீமன், ஆகியவர்களும் இருந்தனர். தருமன் இயற்கையிலேயே அளவற்ற பொறுமையியல்பு கொண்டவனாகையால், “தருமத்தை எவரும் அழிக்க முடியாது” என்று அமைந்த மனத்தோடு பேசாமல் இருந்து விட்டான். பலாயனனாக இருந்த வீமனுக்குத்தான் படபடப்பையும் ஆத்திரத்தையும் அடக்க முடியவில்லை. தான் எந்த வேடத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து கீசகனை அப்படியே மார்பைக் கிழித்துக் கொன்று விடலாம் போலிருந்தது அவனுக்கு. சபாமண்டபத்துக்கு வெளியே படர்ந்து வளர்ந்த பெரிய மரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தை வேரோடு பிடுங்கி வீமன் தன் ஆத்திரத்தைக் காட்ட விரும்பினான்.

நல்லவேளையாக அருகே கங்க முனிவர் உருவில் இருந்த தருமன், “பொறுத்திரு. ஆத்திரமடையாதே!” என்று குறிப்பாக அவனுக்குப் புலப்படுத்தினான். பலாயனன் மரத்தையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்ட அவையினருக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.

உடனே தருமன், “பலாயனா! சமையல் செய்வதற்கு விறகாகும் என்பதற்காகத்தானே இந்த மரத்தை இப்படி உற்று உற்றுப் பார்க்கிறாய்? இது ஈரமரம். இதில் நெருப்புப் பிடிக்காது. வேறு ஓர் காய்ந்த மரத்தை விறகுக்காகத் தயார் செய்து கொள்ளலாம். இது வேண்டாம். இதை விட்டுவிடு"