பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அறத்தின் குரல்

காவியத்தின் தலைசிறந்த குறிக்கோளாம். ‘ஐவர் காவியமாகிய’ பாரதக் கதையை எத்துணையோ முறை எழுத்திலும் பேச்சிலும் கண்டு அனுபவித்தவர்கள் தாம் நாம். பாரதமும், இராமாயணமும் பாரத நாட்டின் பரம்பரையான அநுபவச் செல்வங்கள் . இதிகாசமாக அலர்ந்த இணையற்ற இலக்கிய வடிவங்கள். அவற்றை எத்துணை முறைகள் எழுதினாலும் பேசினாலும் சுவையோ, உண்மைகளோ, நயங்குன்றப் போவதில்லை. வாடாத செந்தளிர்க் கற்பகத்தின் வைப்புகள் அவை. இங்கே விரியும் இந்த ஐவர் காவியம் இதயப் பண்பாட்டை மலரச் செய்ய வேண்டும் என்ற தூய குறிக்கோளின் விளைவு. இந்த விளைவுக்கு ஏற்படும் பயன்மிகுந்தால் அதுவே இத் தொடரின் மாபெரும் வெற்றி. பாரதத்தின் தருமனைப் போல் இல்லாவிடினும் வாழ்வில் ஒல்லும் வாய் எல்லாம் அறத்தைக் கைவிட்டு விடாமல் காக்கும் நல்ல உள்ளம் பெறுமாறு எல்லோரையும் தூண்டிச் செயற்படுத்தும் தூய பண்பையாவது இது நல்கியே தீரும்.