பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

285

இதோ நான் இருக்கிறேன், என்னோடு போர் செய் துரியோதனனை விட்டு விடு” -என்று கூறிக் கொண்டே முன் வந்து நின்றான் கர்ணன். அர்ச்சுனனுக்கு எதிராகக் கர்ணன் நின்று போரிட அவனுக்கு ஒரு தேர் கொண்டு வந்து கொடுத்தார்கள் குருகுலப் படையினர். எடுத்த எடுப்பிலேயே தான் செலுத்திய விரைவான அம்புகளால் அந்தத் தேரை அடித்து முறித்து வீழ்த்தினான் அர்ச்சுனன். மற்றும் இரண்டு தேர்கள் கர்ணனுக்காகக் கொண்டு வரப்பட்டன. அவற்றையும் அர்ச்சுனன் அழித்து விட்டான். மூன்று தேர்கள் பறிபோன அதிர்ச்சி கர்ணன் மனத்தில் உறைத்தது. அவன் தேரில்லாமலேயே போர் செய்தான். தேர் மேல் நின்று அர்ச்சுனன் செலுத்திய அம்புகள் கர்ணனுடைய வில்லையும் அம்பறாத் துணியையும் முலைக்கு ஒன்றாகச் சிதறி ஓடச் செய்தன. ஆடை அணிகலன்களெல்லாம் அம்புகளால் சிதைந்து கிழிந்து போன நிலையில் அங்கு நிற்பதற்கு வெட்கமுற்று ஓடலானான் கர்ணன். துரோணர் மகனாகிய அசுவத்தாமன் கர்ணனை அந்த அலங்கோல நிலையிலே கண்டு கை கொட்டிச் சிரிக்கலானான். கர்ணனைத் தோற்று ஓடச் செய்த பின்பு மூதறிஞரும் தன் ஆசிரியருமாகிய துரோணரோடு போர் புரிய வேண்டிய நிலை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது.

அவன் தயக்கமடைந்தான். அவன் உள்ளம் ஆசிரியரோடு போர் புரிய மறுத்தது. நியாயந்தானே! மனம் துணியுமா? ‘அவரோடு தான் போர் புரிய விரும்பவில்லை’ -என்பதை அவருக்குத் தெரிவிப்பான் போலச் சில அம்புகளைச் செலுத்தி அவர் திருவடிகளை அந்த அம்புகள் வணங்கிச் சரணாகதி அடைவதைப் போலக் குறிப்புக் காட்டினான். “யான் எப்போதும் உங்களை என் கைகளைக் கூப்பி வணங்குவதற்கு உரியவனே அல்லாமல் வில்லை வளைத்து வணங்குவதற்கு முயலமாட்டேன். அது அபசாரம்” -என்பது அவன் செய்த குறிப்பின் பெயர். அதை விளங்கிக் கொண்டு உள்ளூர் மகிழ்ச்சி அடைந்த துரோணர்,