பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

291


“அதென்ன நான் சொல்கிறேன்! நீர் எதிர்த்துப் பேசுகிறீரே? என் மகன் ஒரு பேடியைக் காட்டிலுமா கேவலமானவன்?”

“அதற்குச் சொல்ல வரவில்லை அரசே பேடியால் தான் வென்றிருக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.”

“நிச்சயமாக நீர் அப்படித்தான் நம்புகின்றீரா?”

“கண்டிப்பாக அப்படித்தான் நம்புகிறேன்” விராடனுக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. கையிலிருந்த சூதாடும் வட்டைப் படீரென்று தருமனின் நெற்றியில் வீசி எறிந்து விட்டான். வேகமாக நெற்றிப் பொட்டில் போய்த் தாக்கிய வட்டு ஆழப் பதிந்து அங்கிருந்து ரத்தம் வரும்படியாகச் செய்து விட்டது. ரத்தம் வடியும் நெற்றியை வலது கையால் அமுக்கிக் கொண்டே விராடனைச் சாந்தம் தவழும் முகத்தோடு ஒரு பார்வை பார்த்தார் கங்கர். அப்போது அந்தப் பக்கமாக வந்த விரதசாரிணி இதைப் பார்த்து விட்டாள். உடனே அவள் தன் புடவை முந்தாணையைக் கிழித்துக் கங்கருடைய நெற்றியில் கட்டுப் போட்டாள். அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விராடன் மனத்தில் திகில் தோன்றிவிட்டது.

“இந்த கங்கர் யாராயிருக்கக் கூடும்? இவர் நெற்றியில் வழியும் இரத்தத்தைக் கண்டு இந்த வண்ணமகள் விரதசாரிணி ஏன் பதறிக் கட்டுப் போட வருகிறாள். முன்னொரு முறை இந்தப் பொண்ணுக்காகக் கீசகன் கொடுமைகளைச் சுட்டி இவர் என்னிடம் பேசினாரே” என்று எண்ணி ஐயமும் கொண்டான். கங்கரிடம் தான் சினத்தால் தகாத முறையில் நடந்து கொண்டு விட்டதாக அவன் உள்ளுணர்வு கூறியது. இவ்வாறிருக்கும்போது உத்தரனும் பேடியும் போர் களத்திலிருந்து வந்து சேர்ந்தனர். யாவரும் அவர்களை வரவேற்பதற்காக அரண்மனை வாயிலுக்குச் சென்றனர். கங்க முனிவரும் சென்றிருந்தார். தேரிலிருந்து இறங்கிய உத்தரனை விராடன் கட்டித் தழுவி வரவேற்றான். தந்தையின் அருகிலே