பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

அறத்தின் குரல்


“உலூகா! எங்கள் சார்பாக நீயே துவாரகைக்குச் சென்று இச்செய்தியைக் கண்ணனுக்கும் கூறிவிட்டு வந்தால் நல்லது” என்று உலூகனை வேண்டிக் கொண்டான் தருமன். உலூகன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கித் துவாரகைக்குப் புறப்பட்டான். துவாரகையில் கண்ணனைச் சந்தித்துச் செய்திகளைக் கூறினான். விவரங்களை அறிந்து கொண்ட கண்ணன் மனத்தில் பல விதமான சிந்தனைகள் உண்டாயின. ஒரு பெரும் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கு ஏற்ற முறையில் பாண்டவர்களைத் தயார் செய்தாக வேண்டுமே என்ற கவலை அவனைப் பிடித்துக் கொண்டது. “அர்ச்சுனனை உடனே நான் சந்திக்க விரும்புகிறேன். நீ போய் அவனை வரச்சொல்” என்று உலூகனிடமே கூறி அனுப்பிவிட்டு எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய சிந்தனைகளில் எண்ணங்களை மிதக்க விட்டான் மாயப் பெருமான், சிந்தனைகளுக்கு எல்லாம் மூலமான அவன் கூட ஒரு சிந்தனையில் ஈடுபட்டான்.

2. போர் நெருங்குகிறது!

பாண்டவர்கள், கௌரவர்கள். இருசாராருமே இப் போரின் அவசியத்தை உணர்ந்து விட்டனர். தங்கள் தங்கள் பக்கம் படைகளையும் அரசர்களையும் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இருதரப்பினரும் இறங்கினர். துரியோதனனுக்கு உலூகன் வந்து போனதிலிருந்து “போர் உறுதி” என்ற எண்ணம் இதன் தோன்றி விட்டது. தன்னைச் சேர்ந்தவர்களில் வலிமை வாய்ந்தவர்களாகிய வீட்டுமன், விதுரன், கர்ணன் ஆகியவர்கள் ஒருவருக்கொருவர் விருப்பமின்றி இருப்பது முதல் பலவீனமாகப் பட்டது அவனுக்கு. எனவே அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்துப் பலவாறு சமாதான உரைகளைக் கூறினான். அண்டை அயலிலுள்ள சிற்றரசர்களை அழைத்து வரவும் தன் பக்கம் படைத்துணையாகச் சேர்த்துக் கொள்ளவும் தகுதி வாய்ந்த