பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/315

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

313


“முடியாது! விடமாட்டேன். பாரதப் போரில் எங்களுக்கு முழு உதவியும் புரிந்து வெற்றிக்குத் துணை செய்வதாக வாக்களித்தால் தான் விடுவேன்.”

“கட்டாயம் உங்களுக்கு உதவுகிறேன் சகாதேவா! இப்போது என்னை விட்டுவிடு. இங்கு நமக்குள் தனியே நடந்த உரையாடல்களையும் நிகழ்ச்சிகளையும் நீ வேறு எவருக்கும் கூறக் கூடாது.” கண்ணன் வேண்டிக் கொண்டான். சகாதேவன் தன்னுடைய பக்திச் சிறையிலிருந்து கண்ணனை விடுவித்தான். அவர்களிருவரும் தனியிடத்திலிருந்து விலகிச் சென்று மற்றவர்களுடன் கலந்து கொண்டனர். கண்ணன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது போய் வருவதென்று முடிவாயிற்று. இந்த முடிவைக் கேட்ட திரெளபதி கண்ணனுக்கு முன்வந்து கண்ணீர் சிந்தி வருந்தினாள்.

“என்னை மானபங்கப் படுத்திய துரியோதனாதியர்களைப் போர்க்களத்தில் பழிக்குப் பழி வாங்காமல் ஐந்து ஐளர்களையோ, ஐந்து வீடுகளையோ, சமாதானமாகப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டால் எனது சபதத்தை நான் என்றைக்கு நிறைவேற்றுவது? முடியாமல் கிடக்கிற என் கூந்தலை துரியோதனனின் இரத்தத்தைப் பூசி என்றைக்கு முடிவது? கண்ணா ! நீதான் என் சபதம் வீணாகாமல் நிறைவேறுவதற்கு உதவி புரிய வேண்டும், என்னைக் கைவிட்டு விடாதே!” என்று அவள் கண்ணனை வணங்கி வேண்டிக் கொண்டாள்.

கண்ணன் பலராமன் ஆகியவர்களின் கடைசிச் சகோதரனாகிய சாத்தகி என்பவன் திரெளபதியின் வேண்டுகோளால் மனம் குழைந்து, “என்ன ஆனாலும் சரி துரியோதனாதியர்களிடம் போய்ப் பிச்சை கேட்பது போல நாடு கேட்கக் கூடாது. நாம் ஆண்மையற்றவர்கள் இல்லையே! தூதும் சமாதான முயற்சியும் நமக்குத் தேவை இல்லை. கண்ணன் முன்பே சாரசந்தனுக்குப் பலமுறை தோற்றவன்.