பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/316

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

அறத்தின் குரல்

அவன் முடிவை ஒப்புக் கொள்ள வேண்டாம். நாம் போரே செய்வோம்” என்று ஆத்திரமாகக் கூறினான்.

“தூதும் சமாதானமும் ஏற்பட்டால் நான் திரும்பி வந்ததும் என் கைகளாலேயே திரெளபதியின் கூந்தலை முடிந்து விடுகிறேன். உங்கள் பகைவர்களின் மனைவிமாரே இனி அமங்கலமாகக் கூந்தலை விரித்துக் கொண்டு கிடக்க நேரிடும். உன் மகன் அபிமன்யு உன் பகைவர்களை அழித்து வேரறுப்பான்! நீ பயப்படாதே...” சாத்தகியின் பேச்சைக் கேட்ட கண்ணன் இவ்வாறு திரெளபதிக்கு ஆறுதல் கூறி அவளைச் சமாதானப்படுத்தலானான்.

4. தூது சென்ற இடத்தில்...

கண்ணனும் திரெளபதிக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்ட தருமன் மனம் துணுக்குற்றான். ‘நம்முடைய விருப்பப்படி சமாதானமாகப் போக இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! எப்படியும் போரை உண்டாக்கி விடுவார்கள் இவர்கள்’ என்று வருந்தினான். “சினங் கொள்ளுகின்றவர்கள், முனிவர்கள், நிறைகுணமற்றவர்கள், நோயாளிகள், அறிவிலிகள், அறத்தை உணராதவர்கள், பெண்கள் இவர்களெல்லாம் இருக்கும் இடத்தில் அரசியலைப் பற்றிய பிரச்னைகளைக் கலந்தாலோசிக்கக் கூடாது எனப் பெரியோர் கூறுவர். அது இப்போது பொருத்தமாகிவிட்டது!” என்று கூறிவிட்டுக் கண்ணனை நோக்கினான், தருமன். மந்திராலோசனை முடிந்தது. பாண்டவர்கள் சார்பாகக் கண்ணன் சமாதானத் தூது புறப்பட்டான். பலவகை மரியாதைகளோடு கண்ணனைத் தூதனுப்பினர் பாண்டவர்கள். கண்ணன் அத்தினாபுரத்தை அடைந்து நகருக்கு வெளியே உள்ள சோலை ஒன்றில் தங்கினான். தன் வரவைத் துரியோதனனுக்குச் சொல்லி அனுப்பினான். துரியோதனன் கண்ணனை வரவேற்று எதிர்