பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

315

கொண்டழைத்து வருவதற்குச் சிறப்பான ஏற்பாடுக்களைச் செய்தான்.

“துரியோதனா! நீ உயர்குலத்தில் பிறந்த பேரரசன். கண்ணன் இடைக்குலத்தில் தோன்றிய சிற்றரசன். அவனை நீ போய் எதிர்கொண்டழைத்து வருவது உன் பெருமைக்கு இழுக்கு. அழைப்பும் வரவேற்பும் அவனுக்கு வேண்டாம். அவன் தானாகவே வரட்டும்.” -என்று சகுனி தடுத்து விட்டான். இதனால் துரியோதனன் வரவேற்பு ஏற்பாடுகளைக் கலைத்துவிட்டுத் தானும் போகாமல் இருந்துவிட்டான். ஆனால் வீட்டுமன். விதுரன், துரோணன் முதலிய பெரியோர்கள் கண்ணனை வரவேற்றுக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். துரியோதனன் தன்னை அவமதிக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட கண்ணன், வேண்டுமென்றே அவன் அரண்மனைக்குப் போகாமல் விதுரனுடைய அரண்மனையில் போய் விருந்தினனாகத் தங்கினான். கெளரவர்கள் நிலை பற்றி விதுரனைக் கலந்தாலோசித்தான்.

“துரியோதனாதியர்கள் எதற்கும் அஞ்சாத தீயவர்கள். சிந்தித்துப் பார்க்கும் அறிவும் அற்றவர்கள். ஆகவே அவர்களிடம் சமாதானத்தை நாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. போர் செய்து கொன்று குவித்தாலொழிய அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். பாண்டவர்களால் சாக வேண்டுமென்பது அவர்கள் தலையெழுத்தானால் அது வீண் போகுமா?” என்றார் விதுரன்.

“துரியோதனாதியர்கள் மட்டுமென்ன? உலகத்தில் எல்லாருமே கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கிற கைக்குத்தான் பயப்படுகின்றார்களே ஒழிய அணைக்கிற கைக்குப் பயப்படுவதில்லை. உலக இயற்கை அப்படி இருக்கிறது. என்ன செய்யலாம்?” -அன்று முழுவதும் கண்ணன் விதுரன் மாளிகையிலேயே தங்கியிருந்தான். வேறெங்கும் போகவில்லை. மறுநாள் காலை பொழுது புலர்ந்ததும் நீராடல் முதலிய காலைச் செயல்களை முடித்துக்