பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

அறத்தின் குரல்

அவ்வாறு வெட்டிய பள்ளத்தில் ஆயுதந்தாங்கிய வீரர்களையும் மல்லர்களையும் மறைந்திருக்கச் செய்ய வேண்டும். கண்ணன் வந்து ஆசனத்தில் உட்கார்ந்ததும் ஆசனம் முறிந்து விழும்படி மெல்லிதாக இருக்க வேண்டும். ஆசனம் முறிந்து கண்ணன் பள்ளத்திற்குள் விழுந்ததும் அங்கிருப்பவர்களைக் கொண்டு அவனை இரும்புச் சங்கிலிகளாலும் விலங்குகளாலும் பிணித்து யாருக்கும் தெரியாமல் ஒரு சிறைச்சாலைக்குள் அடைத்து விட வேண்டும்.” -சகுனியின் இந்தத் திட்டத்தை எல்லோருமே ஒப்புக் கொண்டார்கள். மறுநாளே கீழே பள்ளமான நிலவறை அமைக்கப்பட்டு அதன் மேல் மெல்லிய மூங்கில் பிளாச்சுக்களால் ஒரு ஆசனம் போல் கட்டப்பட்டிருந்தது. நிலவறைக்குள் தயாராக வீரர்களும் மல்லர்களும் ஆயுதங்களுடன் மறைந்து இருந்தனர்.

6. சூழ்ச்சியின் தோல்வி

கண்ணன் விருந்துக்கு அழைக்கப்பட்டான். எல்லா நன்மை தீமைகளையும் முக்காலங்களோடும் தொடர்புபடுத்தி உணரவல்ல அந்த மாயன் ஒன்றுமே தெரியாதவனைப் போல அந்த விருந்துக்கு வரச் சம்மதித்தான். கண்ணனை விருந்தினனாக ஏற்று உபசரிப்பதற்கென்று துரியோதனனுடைய அவை கூடியிருந்தது.

கண்ணன் தன் பரிவாரங்களுடனும் தன்னைச் சேர்ந்த சிற்றரசர்களுடனும் வந்தான். கண்ணன் ஒருவனைத் தவிர வேறு யாரையும் அவனோடு உள்ளே விடக் கூடாதென்பது வாயிற் காவலர்களுக்குத் துரியோதனன் இட்டிருந்த கட்டளை. அதன்படி உடன் வந்த எல்லோரையும் வெளியே தடுத்து நிறுத்திவிட்டுக் கண்ணனை மட்டுமே உள்ளே விட்டான் காவற்காரன். கண்ணன் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான். கண்ணனிடம் பேரன்பு கொண்டவன் போல நடித்த துரியோதனன், போலி