பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/353

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

351

வேளையில் அதே ஆளை நாமே நம் சார்பில் களப்பலி கொடுத்து விட்டால் என்ன?”

“அதெப்படி முடியும்? அந்த வேளையில் துரியோதனனும் அவனுடைய ஆட்களும் அரவானிடம் வாக்குப் பெற்றுக் கொண்டபடி அவனைப் பலிக்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்களே?” என்று பாண்டவர்கள் கவலையோடு கண்ணனை நோக்கிக் கேட்டனர்.

“முடியாமல் என்ன? எல்லாம் நான் அல்லவா முன்னின்று முடித்து வைக்கப் போகிறேன்! பதினைந்தாவது திதியில் வரவேண்டிய அமாவாசையைப் பதினான்காந் திதியன்றே வரவழைத்துவிடலாம். அன்றே துரியோதனனை முந்திக்கொண்டு களப்பலியையும் கொடுத்து விடலாம்.”

“அமாவாசை திதியை ஒரு நாள் முன்பு வரவழைப்பதா? அதெப்படி முடியும்? பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காந் திதியாக வரவழைப்பது சாத்தியமான காரியமாகப்படவில்லையே!”

“உங்களுக்கு ஏன் அந்தத் தயக்கம்? அது சாத்தியமாகும் படிச் செய்து காட்டுகிறேன் நான்” -என்று கண்ணன் கூறினான்.


9. களப்பலியும் படைவகுப்பும்

கண்ணனுடைய ஏற்பாட்டின்படி பதினான்காந் திதியாகிய சதுர்த்தசியன்றே முனிவர்களும் பெரியோர்களும் அமாவாசை திதிக்குரிய கிரியைகளையெல்லாம் செய்தனர். பெரிய பெரிய முனிவர்கள் எல்லோருமே இப்படிச் செய்வதைக் கண்டு, “உண்மையில் இன்றைக்குத்தான் அமாவாசையா? அல்லது நாளைக்கா?” -என்று சூரியனுக்கும் பாவ சந்திரனுக்குமே சந்தேகமாகப் போய்விட்டது. சூரியனும் சந்திரனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர்