பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/364

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீட்டும பருவம்

1. போரில் மனப்போர்

அலைக்கரங்களைக் கொட்டிக் குமுறும் இரண்டு பெருங்கடல்கள் எதிரெதிரே தடைப்பட்டு, நிற்பனபோல இருபுறத்துப் படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றன. படைத்தலைவர்களின் ஆணை ஒன்றே கிடைக்க வேண்டியதாக இருந்தது. அது கிடைத்து விட்டால் படைகள் கைகலந்து மோதிவிடும். இந்த நிலையில் இது தேர்மேல் நின்று கொண்டு தன் எதிரே கண்ணுக்கெட்டிய தொலைவுவரை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். எதிர்ப்புறம் கெளரவர் சேனையின் முன்னே நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டதும் அவனையறியாமலே அவன் கைகள் தளர்ந்தன. கண்கள் நனைந்தன. மனம் நெகிழ்ந்தது. களத்தில் போர் தொடங்குவதற்குமுன்னால் அவன் மனத்தில் தொடங்கிவிடும் போலிருந்தது. கண்ணுக்குக் கண்ணாகப் பழகிப் பாசம் காட்டிய பாட்டனார் வீட்டுமன். பால் நினைந்து ஊட்டுகின்ற தாயினும் சாலப் பரிந்து கலைகளையும் வில் வித்தையையும் கற்பித்த ஆசிரியர் துரோணர், கிருபாச்சாரியார், எவ்வளவோ துரோகம் செய்திருந்தாலும் சகோதரர் முறையினராகிய துரியோதனனும் அவன் தம்பிமார்களும், எல்லோரும் எதிர்புறம் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவன் கண்களை நீர்த்துளிகள் திரையிட்டு மறைத்தன. உடல் வாடித் துவண்டு அப்போதே தேர்த்தட்டின் மேல் மயங்கி விழுந்துவிடும் போல் தோன்றியது. அவன் மனக்களத்தில் பாசத்துக்கும் கடமைக்கும் இடையே பெரும் போர் மூண்டது. தனக்கு முன்னே சிரித்த வாயும் மலர்ந்த முகமுமாகத் தேரைச் செலுத்தும் சாரதியின் பீடத்தில் வீற்றிருந்த கண்ணனை உற்றுப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் அவனுடைய மனநிலையை உய்த்துணர்ந்து கொண்டவனாக மேலும் சிரித்தான்.