பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/367

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

365

தானாக இயங்கவில்லை. இதோ உனக்கு முன் நீ இரண்டு கண்களாலும் காண்கின்ற வெறும் கண்ணனாகவா நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்? இல்லை! பரம்பொருளின் ஓர் அவதார அம்சம் உன் முன் கண்ணன் என்ற பெயர் தாங்கித் தன் இலட்சணத்தைத்தானே கூறிக் கொண்டிருக்கிறது. எனக்கு எத்தனையோ அவதாரங்கள்! எத்தனையோ பிறவிகள். அத்தனைக்கும் தனித்தனி இலட்சியங்கள் உண்டு. நாராயணன் நான்தான். இராமன், இலக்குவன், கண்ணன், அர்ச்சுனன் என்று நாம , உருவ பேதங்கள் பல! ஆனால் இந்த நாமரூப் பேதங்களுக்கு உள்ளே நாமமும், ரூபமும், பேதமும் இல்லாமல் மறைந்து நிற்பவன் யார் தெரியுமா? நான்! நான்தான்! என்ற ஒரு பெருஞ் சக்தி மறைந்து நிற்கிறது. இந்தச் சக்தியின் கட்டளை உனக்கு என்ன கூறுகிறது தெரியுமா? உறவு, பாசம், ஆசையெல்லாம் போலி வெளி வேஷங்கள், அவற்றால் ஏற்படும் மனதளர்ச்சியை உதறி எறி. கடமை எதுவோ அதை செய்! நீயாக எதையும் செய்யவில்லை. அது உன்னால் முடியவும் முடியாது. நான் உன்னுள் நின்று செய்விக்கிறேன், இதை நீ மறந்து விடாதே. கடமையைச் செய்! உனக்காக அல்ல! உன்னுள் நின்று இயங்கும் எனக்காகச் செய்...” பெருமழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது கண்ணனின் உபதேசம். அர்ச்சுனன் மலர்ந்த முகத்தோடு தன் முன்னிருந்த கண்ணனின் உருவத்தை ஏறிட்டுப் பார்த்தான். அங்கே சாதாரணக் கண்ணன் நிற்கவில்லை. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான ஓர் விசுவரூபன் நிற்பதாகத் தோன்றியது அவன் விழிகளுக்கு.

“கண்ணா! என்னை மன்னித்துவிடு. நான் மெய்யை உணர்ந்து கொண்டேன். மனத்தைப் புழுப்போல அரித்து வந்த ஆசாபாசங்கள் அகன்றுவிட்டன. நான் கடமையைச் செய்கிறேன்” -அப்படியே தேர்மேல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கண்ணனின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான் அர்ச்சுனன்.