பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/369

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

367

பதற்காகவே அம்பை என்ற பெண் ஒருத்தி தவம் செய்தாள். அந்தத் தவத்தின் பயனாக இப்பிறவியில் துருபதராசனின் மகனாகச் ‘சிகண்டி’ என்ற பெயருடனே அவள் பிறந்திருக்கிறாள். அவளால்தான் எனக்குச் சாவு ஏற்படப்போகிறது. அவளை ‘சிகண்டி எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினால் பெண்ணாக இருந்து ஆணாகப் பிறந்தவன்’ என்ற இழிவினால் நான் வில்லையோ, வாளையோ, கையால் எடுக்காமலே வெறுங்கையோடு நின்று விடுவேன். அப்படி நான் வெறுங்கையோடு நிற்கும்போது, அர்ச்சுனன் எய்யும் அம்புகளால் சாகும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமாயின் அதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்ளுவேன். கண்ணா! எல்லா மாயங்களிலும் வல்லவனாகிய நீ துணையிருக்கும் பொழுது பாண்டவர்களுக்குத் தோல்வி ஏது? எல்லாம் மங்கலமாக வெற்றி நிறைவுடனே முடிவுபெறும். கவலையே வேண்டாம்” என்று வாழ்த்துக் கூறி அனுப்பினான் வீட்டுமன். அந்த மூதறிஞரின் நல்ல மனத்தை வியந்து பாராட்டிய வண்ணம் கைகூப்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டு துரோணரைச் சந்திப்பதற்காகச் சென்றனர் பாண்டவர்களும் கண்ணனும்.

துரோணர் புன்முறுவலோடு அவர்களை வரவேற்றார். தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்து நல்லாசிரியர் பெருமானாகிய அவரை வணங்கிப் பணிந்து நின்றனர் பாண்டவர்கள். “கண்ணா! பாண்டவர்கள் மட்டும் தனியாக வரவில்லை. அவர்களை அழைத்துக் கொண்டு நீயும் வந்திருக்கிறாய்! நீ கூட வந்திருந்தால் ஏதாவதொரு மாயமும் தந்திரமும் கூட வந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!” துரோணர் சிரித்துக் கொண்டே இப்படிக் கேட்டார். கண்ணனும் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்:

“மாயமாவது, தந்திரமாவது! அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் பாண்டவர்களின் குரு. இப்போது இந்தப் போரில் நீங்களே அவர்களுக்கு எதிராக வில்லை எடுத்துப் போரிடும்படி நேர்ந்து விட்டதே என்றெண்ணித்தான் வருந்துகிறேன்."