பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/383

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

381


முறித்து வீழ்த்திவிட்டாலும் சில அம்புகள் அவன் உடலிலும் தைக்கத்தான் தைத்திருந்தன. நேரம் ஆக ஆகப் போரில் வீமனுக்கு வெறிபிடித்து விட்டது. வீமன் துணையின்றி நலிகின்றானோ என்றெண்ணிப் பல வீரர்கள் அவன் பக்கம் துணையாக உதவ வந்தார்கள். ஆனால் வீமனோ தனியாகவே துரியோதனனின் வில்லை முறித்தான். தேர்க்குதிரைகளைக் கொன்றான். அம்புகளால் அவன் உடலைச் சல்லடைக் கால்களாகுமாறு துளைத்தான். துரியோதனன் திக்கு முக்காடிப் போனான். அவன் நிலைக்கு இரங்கிச் சகுனி, சல்லியன் முதலியவர்கள் உதவிக்கு ஓடிவந்தார்கள். துரியோதனனுடைய தம்பிமார்கள் சிலரும் உதவிக்கு வந்தார்கள். வீமன் போரை நிறுத்தவில்லை. தன்னுடைய வீரமிக்க போரினால் துரியோதனனின் தம்பியர்களில் ஐந்துபேர்களை விண்ணுலகுக்கு விருந்தாளியாக்கினான். துரியோதனன் உண்மையிலேயே தளர்ந்து விட்டான். வீமனும், அபிமன்னனும் அர்ச்சுனனும் நாலா திசைகளிலிருந்தும் தாக்கிக் கெளரவப் படைகளை சின்னாபின்னமாக்கினர். சூறாவளிக்கு நடுவே பஞ்சுபோல் திணறியது அவன் படை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரியோதனாதியர் படைகளைப் ‘பகதத்தன்’ என்பவன் சிதறாமல் ஒன்று சேர்த்துக் கொண்டு மீண்டும் பாண்டவசேனையோடு போருக்கு வந்து விட்டான். இவன் உறுதியும் துணிவும் மிக்கவன். எப்படியும் பாண்டவர் படைகளை ஒரு ‘கலக்குக் கலக்குவது’ என்று வந்திருந்தான். யானைப் படையிலிருந்த யானைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு, திமுதிமுவென்று பாண்டவ சைனியத்தின் அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டான். இதனால் பாண்டவர்படை அழிந்து ஓடத் தலைப்பட்டுவிட்டது. இதைக் கண்ட கடோற்கசன் தன் வசமிருந்த சில யானைகளையே பல்லாயிரக்கணக்கான யானைகளாகத் தோன்றும்படி மாயம் செய்து கொண்டு பகதத்தனை மோதி எரித்தான். கடோற்கசனைப் போலவே