பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

385

உதவியாக வந்தனர். வீமனும் கடுமையாகப் போர் செய்தான். துரியோதனன் தம்பியர்களில் சிலர் அன்று வீமன் கைக்கணைகளால் இறந்தனர். வீமன் செய்த போரை மானசீகமாகத் தேவர்களும் பாராட்டினர். இவர்கள் இவ்வாறு போர் செய்து கொண்டிருக்கும்போது விகர்ணனும் அபிமன்னனும் களத்தின் வேறோர் புறத்தில் போர் செய்து கொண்டிருந்தனர். தனக்கு எதிரே வந்த வேகத்திலேயே விகர்ணனின் தேரை அடித்து முறித்தான் அபிமன்னன். தேர் ஒடிந்ததும் தனக்கு அருகே நின்று கொண்டிருந்த சித்திரசேனன் என்பவனுடைய தேரில் ஏறிக் கொண்டு போர் செய்தான் விகர்ணன். ஏறக்குறைய இதே சமயத்தில் துரியோதனனின் தம்பிகளில் வேறு சிலரும், சயத்திரதன், பகதத்தன் ஆகியவர்களும் இன்னொரு பக்கத்திலிருந்த அபிமன்னனை எதிர்த்துக் கணைகளைத் தூவினர். அபிமன்னனோ அவர்கள் தன்மேல் செலுத்திய அம்புகளைத் தந்திரமாக விலக்கி விட்டுத்தான் அவர்கள் மேல் செலுத்துகிற அம்புகளை மட்டும் குறி தவறாமல் எய்தான். விகர்ணன் அபிமன்னனுடைய அம்புகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறினான். சயத்திரதன் பகதத்தன் முதலிய பெரிய பெரிய வீரர்கள் கூட அபிமன்னனை நெருங்க முடியவில்லை. துரியோதனன் அபிமன்னனை எதிர்க்க வழி தெரியாமல் மருண்டு போய்த் திகைத்தான். அற்புதமாகப் போர் புரிந்த அபிமன்யுவைப் பாண்டவர்கள் பாராட்டிக் கொண்டாடினர்.

ஏழாம்நாள் காலையில் போர் தொடங்குகிறபோது பாண்டவர்கள் சேனை சர்ப்பவியூகமாகவும், கெளரவர் சேனை சக்கரவியூகமாகவும் நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த பாண்டிய மன்னன் துரோணரை எதிர்த்துப் போர் செய்தான். கடோற்கசனும் போர்க்களத்தில் சுறுசுறுப்போடு தோன்றிப் போர் செய்து கொண்டிருந்தான். துரியோதனாதியரைச் சேர்ந்தவனாகிய ‘சுதாயு’ என்பவன் சாத்தகியை எதிர்த்தான்.

அ.கு.-25