பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/390

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

அறத்தின் குரல்

தருமத்தையும் மீறியே வாழப் பழகியிருக்கிறாய் நீ. இந்தத் தீய செயல்களின் பாவபலன்களை நீ அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கற்பின் செல்வியாகிய திரெளபதியை அவைக்கு நடுவே மானபங்கம் செய்கிறபோது இப்போது ஏற்படுகிற தீமைகளெல்லாம் ஏற்படும் என்று கருதித்தானே நாங்கள் தடுத்தோம். ஆனால் நீ அன்று எங்கள் அறிவுரையை இலட்சியம் செய்தாயா? விதுரன் மனம் புண்ணாகி உன்னை வெறுத்து வில்லை முறித்துப் போட்டு விட்டுப் போகும்படி செய்தாய்! சகுனி, துச்சாதனன், கர்ணன் முதலிய தீயவர்களின் சொற்களைக் கேட்டாய். தன்னை அதிரதனாக நியமித்தாலொழியப் போர் செய்ய முடியாது என்று உன் உயிருக்கு உயிரான கர்ணன் கூறிவிட்டுப் போய்விட்டான். எதிர்த்தரப்பில் உள்ள வீமன், அர்ச்சுனன், திட்டத்துய்ம்மன், முதலிய மகா வீரர்களைக் கவனிக்கும்போது நம்மிடம் படையே இல்லை என்றுதான் தோன்றுகிறது! வெற்றியோ? தோல்வியோ? விளைவை விதி உண்டாக்கும். நீ என்னிடம் வந்து பரிதாபப்பட்டு என்ன பயன்? யார் கையில் என்ன இருக்கிறது” -என்று நீண்டதோர் அறிவுரையை அவனிடம் கூறி அனுப்பிவிட்டுப் போர்க்களத்தில் படைகளிடையே புகுந்து சென்றான் தலைவனான வீட்டுமன்.

முன்பு களப்பலியாக இறந்து போன அரவான், தான் கண்ணனிடம் கேட்டிருந்த வரத்தின்படி உயிர்பெற்றுப் போர்க்களத்திற்கு வந்து போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனும் வழக்கம்போல் மாயத்தன்மை பொருந்திய உருமாற்ற வித்தைகளின் மூலமாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனோடு போர் புரிந்து கொண்டிருந்த ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் தோற்று ஓடும்போது அருகில் நின்று கொண்டிருந்த அரவானைப் போகிற போக்கில் ஓங்கி வெட்டிவிட்டுப் போய்விட்டான். அரவான் வெட்டுப்பட்ட உடனேயே இறந்து போய் விட்டான். ‘அலம்பசன் அரவானைக் கொன்றுவிட்டான்’ -என்ற செய்தி ஒரு விநாடியில் போர்க்களம் எங்கும்