பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

அறத்தின் குரல்

உயிரோடு இருக்க வேண்டும் என்று உனக்கு ஆசை இருக்குமானால் பிழைத்துப் போ” என்றான் வீமன். இதைத் தன் செவிகளால் கேட்ட பின்பும் வெட்கத்தினால் வேறு மறுமொழி கூறத் தோன்றாமல் தலை குனிந்த வண்ணமே பாசறைக்குத் திரும்பினான் துரியோதனன். எட்டாம் நாட்போராகிய அன்றைய வெற்றி பாண்டவர்கள் பக்கமே மிகுதியாக இருந்தும் கூட அரவானை இழந்த துயரத்தால் அவர்கள் மனத்திலும் நிம்மதியே இல்லை. “இன்று களத்தில் இறப்பதன் முன் அன்றே களப்பலியாக இறந்தவன்தானே அரவான்! அவன் மாண்டதற்காக வருந்த வேண்டாம், வீர சுவர்க்கத்தில் நல்ல இடம் பெறுவான் அவன்” என்று கண்ணபிரான் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறி ஆற்றினான்.

எட்டாம் நாள் போரை முடித்துக் கொண்டு பாசறைக்குப் போன துரியோதனனின் மனம் சோகத்தினாலும் ஏமாற்றத்தினாலும் வெம்பிச் சாம்பியது. பாசறைக்குப் போன உடனேயே ஒரு காவலனை அழைத்துக் கர்ணனைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னான். கர்ணன் வந்தான். தம்பியர் இறந்து போனது பற்றித் துக்கம் விசாரித்தான். சிறிது நேரத்தில் கூப்பிட்டனுப்பிய காரணத்தை மெல்லக் கேட்டான், “கர்ணா! காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமா? போரில் எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை நீயே தெரிந்துகொண்டுதானே இருக்கிறாய்? இன்று வரை என் தம்பியர்களில் இருபது பேர் இறந்து விட்டனர்! நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வில்லெடுத்துப் போர் செய்தால் என்ன? சும்மா இருந்தால் தான் என்ன? நீ வந்து வில்லெடுத்துப் போர் செய்ய வேண்டும்! அப்போது தான் அந்தப் பாண்டவர்கள் பயப்படுவார்கள்” என்று உருக்கம் நிறைந்த குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான் துரியோதனன்.

“வாஸ்தவம்தான்! ஆனால் வீட்டுமன் உயிரோடு இருக்கும் வரை நான் வில்லெடுக்கமாட்டேனே? அதற்கென்ன