பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

அறத்தின் குரல்

சம்மதித்து அலம்பசனோடு மற்போருக்குப் போனான். சிறிது நேரம் இருவருக்கும் கடுமையான மற்போர் நடந்தது. மற்போரிலும் அலம்பசனே இளைத்தான்.

மீண்டும் திடீரென்று அவன், “மற்போர் போதும்! விற்போர் தொடங்குவோம்” என்று எழுந்து தேரில் ஏறி வில்லை எடுத்துக்கொண்டான். உடன் வீமனும் வில்லை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் பழையபடி விற்போர் தொடர்ந்து நடந்தது. வீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதிய அலம்பசன், மீண்டும் திடீரென்று, “விற்போர் போதும்! மீண்டும் மற்போர் செய்யலாம் வா!” என்றான். வீமனும் மறுக்காமல் அவனுடன் மற்போர் செய்யமுற்பட்டான். இருவருக்கும் மற்போர் நடந்தது. மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வீமன் மேல் எறிந்தான். நல்லவேளையாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்னன் இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்து விட்டான். வீமன் கல்லடி பட்டு நொறுங்காமல் பிழைத்தான். ‘இனி இந்த அசுரனை உயிரோடு விட்டால் அவனால் வீமன் உயிருக்கு என்னென்ன துன்பம் நிகழுமோ?’ என்று பயந்த அபிமன்னன் ஒரு வேலை எடுத்து அலம்பசனின் மார்பிற்குக் குறிவைத்துப் பாய்ச்சி விட்டான். அலம்பச அசுரனைச் சேர்ந்த அரக்கர்கள் வேல் அவன் மேல் பாயாமலிருக்க வேண்டும் என்பதற்காக இவனைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். உடனே வீமன் தன் கதாயுதத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றவர்களை நையப் புடைத்து விலக்கினான். அபிமன்னன் எறிந்த வேல் அலம்பசனின் மார்பிலே பாய்ந்துவிட்டது. அலம்பசன் வீறிட்டு அலறி மாண்டு வீழ்ந்தான். தன் தம்பி அரவானைக் கொன்றவனை அபிமன்னன் பழி வாங்கிவிட்டான் என்று போர்க்களத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மேலும் அன்றைக்கு அர்ச்சுனன் செய்த