பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

அறத்தின் குரல்

எதிர்த்துப் போரிடுங்கள். எனது உயிரின் முடிவு இதோ, மிக அருகில் என்னை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது” இப்படிச் சொல்லி விட்டு மீண்டும் சோர்ந்து விழுந்து விட்டான் வீட்டுமன். வேதனையால் மேல்மூச்சுக் கீழே மூச்சு வாங்கியது. வாயிலிருந்து மெல்லிய முனகல் ஒலிகள் கிளம்பின. இரத்தம் பாய்ந்து விழுந்த இடத்தை எல்லையிட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் இந்தச் செய்தி போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. ‘வீட்டுமன் வீழ்ந்து விட்டான், வீட்டுமன் வீழ்ந்து விட்டான், என்று எங்கு நோக்கினும் அதே பேச்சாக இருந்தது. பாண்டவர்களும் கெளரவர்களும் போரை நிறுத்தி விட்டனர். இருபக்கத்தையும் சேர்ந்த முக்கியமானவர்களெல்லோரும் வீட்டு மனுக்கருகே வந்து பயபக்தியோடு நின்று கொண்டனர். படைகளும் அந்த மகாபுருஷன் வீழ்ந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கூடி விட்டன. கண்ணனும் அருச்சுனனும் தேரிலிருந்து இறங்கி வீட்டுமனின் தலைப்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள். காலத்தைக் கணிக்கும் சோதிடர்கள் ஓடிவந்தனர். வீட்டுமன் தளர்ந்து வீழ்ந்த நேரம் தட்சிணாயன காலம் என்று அறிவித்தனர். தட்சிணாயன காலத்தில் இறப்பதற்கு வீட்டுமன் விரும்பவில்லை. விரைவில் வரப்போகின்ற உத்தராயண காலம் வந்த பின்பே இம்மண்ணுலகிலிருந்து உயிர் விடுவதென்று தீர்மானித்தான் அவன். புலனுணர்வுகளை வென்று வாழ்வெல்லாம் தன்னை அடக்கி வாழ்ந்த அந்த மூதறிஞன் தனது அந்திம காலத்தில் உயிரோடும் உடலோடும் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர்கள் யாருமே இல்லை. கடமைக்காக அவன் மேல் அம்பைச் செலுத்தி வீழ்த்திய அர்ச்சுனனே இப்போது கண் கலங்கி நின்றான். வணங்காமுடியோனாகிய துரியோதனன் உணர்ச்சி வசப்பட்டுச் சிறு குழந்தையைப் போல் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தான். மகிழ்ச்சி, துன்பம் இவற்றுக்கு ஆளாகாமல் மனத்தைப் பக்குவப் படுத்தியிருந்த தருமனும்