பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

399

வருத்தத்தின் எல்லையில் மனம் பேதலித்து நின்றான். அணையப் போகிற விளக்கின் இறுதிக் கால ஒளி போல்வீட்டுமன் விழிகள் தன்னைச் சுற்றி நின்றவர்களை ஏறிட்டுப் பார்த்தன. தனக்காக அழுகிறவர்கள், கண் கலங்கி நிற்பவர்கள் எல்லோரையும் அவன் கண்கள் கண்டன. உணர்ச்சி மயமான, உள்ளத்தை உருக்கும் சோகம் நிறைந்த சொற்பொழிவு ஒன்று அந்த இறுதியான நிலையில் மங்கிய தொனியில் அவன் வாயிலிருந்து வெளி வந்தது.

“அன்பர்களே! நண்பர்களே! என் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட உறவினர்களே! வீரர் பெருமக்களே! நீங்கள் யாரும் எனக்காக அழக்கூடாது. மரணம் விலக்க முடியாதது. ஒவ்வொரு உயிரும் தான் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பு இறப்புகளை அடைந்தே தீரவேண்டும். நான் கோழையாகவோ, கையாலாகாதவனாகவோ இறந்து போய்விடவில்லை. மார்பிலே அம்பு தைத்து வீரலட்சணத்தோடு வீரனாகவே இறக்கப் போகிறேன். இதோ என் உடம்பெங்கும் தைத்து ஊடுருவித்தரையில் என்னைக் கிடத்தியிருக்கும் இவ்வளவு அம்புகளும் எனக்குப் படுக்கை விரித்தது போலத் தோன்றுகின்றன. மலர்ப்படுக்கையைக் காட்டிலும் சிறந்ததாக இந்த அம்புப் படுக்கை எனக்குத் தோன்றுகின்றது. இத்தகைய அம்புகளை என் மேல் எய்தவன் அர்ச்சுனன் என்பதை நினைக்கும் போதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது” - இவ்வாறு கூறிக்கொண்டே வந்த வீட்டுமன் பேச்சை நிறுத்திவிட்டு அர்ச்சுனனைச் சைகை காட்டித் தன் அருகே அழைத்தான். அர்ச்சுனன் இன்னும் அருகில் நெருங்கி வீட்டுமனின் தலைப்பக்கமாகக் குனிந்து உட்கார்ந்தான். “அர்ச்சுனா, என்னுடைய தலையைப் பார்த்தாயா? தாங்கிக்கொள்வதற்கு அணைவு ஏதும் இல்லாமல் தரையிலிருக்கிறது! இதற்காக நீதான் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். உன் அம்புகளில் ஒன்றைத்தரையில் நட்டு அதன்மேல் என் தலையை அணைவாகத் தூக்கி வைத்துவிடு. இந்தச் சிறிய உதவியை என்