பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/421

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

419

 வந்த போது தருமனுக்குச் சிரிப்பு வந்தது. ‘எத்தனை முறை போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு காட்டி ஓடியிருக்கிறான் இவன்? இப்போது இருந்தாற் போலிருந்து திடீரென்று இவ்வளவு வீரம் இவன் உடம்பில் எங்கிருந்து வந்து புகுந்தது?’ என்று தருமன் தனக்குள் நினைத்துக்கொண்டான். “என்னப்பா! சகுனி, உனக்குக் கூட இவ்வளவு வீரம் இருக்கிறதா? உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமலே பசுடைகளை உருட்டும் சூது விளையாட்டு அன்று இது! போர் அப்பா போர் இந்த விளையாட்டு உனக்குப் புரியாதே? உன்னால் புரிந்து கொள்ளவும் முடியாதே. வீணாக இதில் ஏன் தலையிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? -சகுனியை நோக்கி இவ்வாறு கூறிக்கொண்டே வில்லை வளைத்தான் தருமன். வளைந்த வில்லிலிருந்து அம்புகள் விரைந்தன. போர் நுணுக்கங்களையும், எதிர்ப்பைச் சமாளிக்கும் ஆற்றலையும் பெறாத சகுனி, தருமனின் அம்புகளைத் தடுக்கத் தெரியாமல் திணறினான். அவனுடன் வந்திருந்த படை வீரர்களும் திணறினர். வெகு நேரம் போர் செய்ய வேண்டிய அவசியமே தருமனுக்கு ஏற்படவில்லை. சகுனியும் அவன் படைகளும் தனித்தனியே சிதறி ஓடினர். அவ்வளவில் தருமனுக்கு எதிர்ப்பின்றி ஒழிந்தது. வேறோர் இடத்தில் வீமன் பலமான எதிரிகளுக்கு நடுவே கடுமையாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். துரோணர். அசுவத்தாமன், கர்ணன், துரியோதனன் ஆகிய பல பெரிய வீரர்கள் அவனை எதிர்த்தனர். அத்தனை பேரையும் தான் ஒருவனாக இருந்தே துரத்தியடித்துக் கொண்டிருந்தான் வீமன். பகைவர்களைத் துரத்தும் பெருமிதம் காரணமாக மலர்ச்சியடைந்த அவன் முகத்தில் புன்சிரிப்பு விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் புன்சிரிப்பு துரியோதனாதியர்க்கு நெருப்பாகத் தகித்தது. தன் தம்பியர்கள் சிலரை ஒன்றாகத் திரட்டிக் கொண்டு மீண்டும் வீமனோடு போருக்கு வந்தான் துரியோதனன் இந்த முறையும் வீமன் அவனுக்குச் சரியானபடி புத்தி கற்பித்தான். அவனும் அவன் தம்பியர்களும் களத்தைவிட்டு ஓட நேர்ந்தது.