பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

அறத்தின் குரல்

வென்று அங்கிருந்து வேகமாக வெளியேறினார். தமது பாசறையை அடைந்து உறங்கச் சென்றார். பின்பு துரியோதனன் முதலிய மற்ற அரசர்களும் தத்தம் பாசறை சென்று உறங்கலாயினர்.

இரவின் அமைதி நிறைந்த ஓய்வுக்குப் பின் பதின்மூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. பொழுது மட்டுமா புலர்ந்தது? இரு திறத்துப் படைகளின் ஒடுங்கிக் கிடந்த ஆவல்களும் கூடப் புலர்ந்தன. பாண்டவர்கள் எப்போதும் போல் வெற்றியை நினைத்து வெற்றியின் மேல் நம்பிக்கை வைத்துப் போர்க்களத்திற்கு வந்தார்கள். ஆனால் கெளரவர்களோ, கழிந்து போன நாட்களில் தொடர்ந்து கிடைத்த தோல்வியைப் பற்றி எண்ணி எண்ணிப் புழுங்கும் மனத்துடன் பொறாமை நிறைந்த எண்ணங்களுடன் களத்தில் வந்து நின்றனர். துரோணருடைய கட்டளைப்படி படைகள் சக்கரவியூகமாக வகுத்து நிறுத்தப்பட்டன. நேற்றுத் தங்கள் பிடியில் அகப்படாமல் தப்பிவிட்ட தருமனை இன்று எவ்வாறேனும் பிடித்துவிடுதல் வேண்டுமென்று துரோணர் திட்டமிட்டிருந்தார். துரியோதனனின் மகனாகிய இலக்கண குமாரன், துரியோதனனின் தம்பியரிற் சிலர் கலிங்கப் பெரும் படைஞர்கள் ஆகிய இவர்கள் மொத்தமாக ஒன்று சேர்ந்து பாண்டவர்களை எதிர்க்க ஒரு படை அமைப்பை வகுத்துக் கொண்டனர். சிந்து தேசத்தின் அரசனும் இணையற்ற வீரனுமாகிய ஜெயத்ரதன் என்பவனை இந்தப் படை அமைப்பிற்குத் தலைவனாக அமைத்துக் கொண்டனர். போர்க்களத்தில் பாண்டவர்களின் ஒற்றர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்ததனால் துரியோதனாதியர்களின் திட்டங்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி அவர்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தன. துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியவர்கள் அன்றையப் போரில் தருமனைப் பிடிக்க எண்ணியிருப்பதையும், வேறு சில இரகசியத் திட்டங்களையும், ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டிருந்த தருமன் கண்ணனையும் தன் தம்பியர்களையும் அழைத்து