பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/427

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

425


“ஆகட்டும் இப்போதே இதைச் செய்கிறேன்” -தருமரின் வேண்டுகோளை அப்போதே நிறைவேற்றுவதற்குத் தயாராகிவிட்டான் அபிமன்னன். உடனே போர்க்கோலம் பூண்டு தேரின் மேல் ஏறினான். தேவையான ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். அப்போது அந்த நிலையில் அபிமன்னனின் தோற்றம் இளஞ்சிங்கக் குருளையென விளங்கிற்று. அழகிய பாதங்களின் மேல் கணுக்காலில் வீரக்கழல்கள் இலங்கின. பரந்த மார்பில் வெண்ணிற முத்துமாலைகள் ஒளி நிறைந்து தோன்றின. பருத்த புயங்களில் வாகுவலயங்கள் அணி செய்தன. நீண்ட அழகிய காதுகளில் மகர குண்டலங்கள் தொங்கின. அழகும், வீரமும், இளமையும் ஒருங்கே ஒன்று சேர்ந்து தேரின் மேல் ஆயுதங்களோடு ஏறி நின்றாற் போலத் தோன்றியது அபிமன்னனின் தோற்றம். ‘இளங்கன்று’ பயமறியாது என்பதற்கு ஏற்பத் தருமனின் வார்த்தையை மீற முடியாமல் ஒப்புக் கொண்டானே தவிர அந்தச் செயல் அபிமன்னனைப் போன்ற ஓர் இளைஞனின் அனுபவத்தைவிடப் பெரியது ஆகும். ஒரு பெரும் படையின் இடையே புகுந்து அதன் வியூகத்தைக் கலைப்பது என்பது இதற்கு முன் அவனுக்கு அனுபவம் இல்லாத விஷயம். எனவே வியூகத்தைக் கலைத்துக் கொண்டு உள்ளே நுழைவது எப்படி என்பதைப் பற்றி அனுபவம் மிகுந்த பெரியோர்கள் பலரைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான் அவன். வியூகத்திற்குள் நுழைவதென்றால் முதலில் முன் வரிசையில் நிற்கும் அதிரதத் தலைவர்களோடு போர் புரிந்து அவர்களை வென்றாக வேண்டும். அபிமன்னன் தன் தேரைக் கௌரவப் படையின் அதிரதர்களுக்கு முன்னே நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்கினான். துரோணரைப் போன்ற பெருவீரர்கள் கூட முன் வரிசையில் நின்று அவனை எதிர்த்துப் போரிட்டனர். வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த சக்கரவியூகத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஆரங்கள் போல் வீரர்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். வியூகத்தை அழிக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு ஆரங்களையும்