பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/430

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

அறத்தின் குரல்

முன்னறிவிப்புப் போலவும் தோன்றியது. சிலர் பயந்து பின்வாங்கினார்கள். சகுனியும் பின்வாங்கினான். அபிமன்னனோ விடாமல் துரத்தலானான். படையில் துரியோதனனின் இளைய சகோதரர்களாகிய விகர்ணன் முதலியவர்களும் இருந்தனர். அபிமன்னனின் முன் வில்லேந்தி நிற்பதற்காக அஞ்சினர் அவர்கள். இவ்வாறு கெளரவர்களின் சக்கரவியூகத்தை அபிமன்னன் தனது போர்த்திறமையினால் ஆரம் ஆரமாகக் கலைத்துக் கொண்டிருந்தபோது பெரியப்பனான வீமனும் அவனுக்கு உதவுவதற்கு வந்து சேர்ந்தான். வியூகம் வேகமாக உடையலாயிற்று. அபிமன்னன் மேல் ஏற்பட்ட பரிவினால்தான் வீமன் உதவிக்கு வந்திருந்தான். தனியாக அபிமன்னன் திண்டாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, “இது யாருடைய ஏற்பாடு? இளைஞனாகிய அபிமன்னனைத் தனியே எதிரிகள் படை நடுவே அனுப்பலாமா? அதனால் அவனுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ?” -என்று வீமன் கடிந்து கொண்டான்.

அவன் இவ்வாறு கூறியதைக் கேட்ட தருமர் உடனே பதறிப் போய், “அப்படியானால் நீயே அவனுக்குத் துணையாகச் சென்று உதவும்” -என்று கூறியதனால் தான் வீமன் அபிமன்னனுக்கு உதவ வந்திருந்தான். வீமனுடைய வருகையால் கௌரவர்களின் சக்கர வியூகத்தில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த பல நாட்டு மன்னர்கள் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. வீமன் வேகமாக முன்னேறினான். வீமனும் அபிமன்னனோடு ஒன்று சேர்ந்து விட்டால் அந்தச் சக்கரவியூகம் மிக விரைவில் அழிந்து விடும். வியூகத்தை உடைத்துக் கொண்டு வீமன் விரைவாக வருவதைப் போர்களத்தின் மூலையிலிருந்து துரியோதனன் பார்த்து விட்டான். அவன் மனத்தில் தாங்க முடியாத திகைப்பு ஏற்பட்டது. அவன் சிந்தனை மின்னல் வேகத்தில் பாய்ந்தது. வீமன் அபிமன்னனை நெருங்குவதற்குள் அவனை இடையே தடுத்து நிறுத்தி விட வேண்டுமென்று நினைத்தான் துரியோதனன். உடனே சகுனி, விகர்ணன், அசுவத்தாமன்