பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/439

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

437

எட்டியது. தருமர் ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் திக் பிரமையடைந்து விட்டார். வீமனுக்கு இதய ஓட்டமே நின்று விடும் போலிருந்தது. மனத்துயரம் பொறுக்க முடியாமல் இருவரும் பலவாறு அழுது புலம்பினர். தருமரும் வீமனும் அன்று அந்த அந்தி வேளையில் அங்கே அழுது புலம்பியதைக் கேட்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் குருக்ஷேத்திரத்துக் கல்லும் மண்ணும் கூட அழுது கண்ணீர் சிந்தியிருக்கும். சூரியன் அஸ்தமிக்கப் போகிற சமயம். அப்போதுதான் சஞ்சத்தகர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். தன் மகனான அபிமன்னன் கெளரவர்களின் வஞ்சனைக்காளாகி இறந்து போனான் என்ற செய்தி அது வரை அவனுக்குத் தெரியாது. ஆனால் அர்ச்சுனனுடைய தேரைச் செலுத்திக் கொண்டிருந்த எல்லாம் வல்ல கண்ணபிரான் தம்முடைய ஞான திருஷ்டியால் அபிமன்னனுடைய முடிவைத் தெரிந்து கொண்டான். அர்ச்சுனன் திடீரென்று அதைக் கேள்விப்பட்டால் கதிகலங்கி மூர்ச்சையாகி விடுவான் என்று பயந்து கண்ணன் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு அதன்பின் அந்தப் பயங்கரச் செய்தியை அவனுக்கு உரைக்க விரும்பினான். கண்ணன் தன் மனத்திற்குள் இந்திரனைத் தியானித்துக் கீழ்வருமாறு வேண்டிக் கொண்டான்:-

“உன் மகன் அர்ச்சுனன் புத்திரனை இழந்து விட்டான். இந்தச் சோகம் நிறைந்த சூழ்நிலையில் உன் மகனுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவிக்க நீதான் வரவேண்டும்” கண்ணனுடைய தியானத்திற்கும் வேண்டுகோளுக்கும் இந்திரன் மனமிரங்கினான். உடனே கண்ணனும் அர்ச்சுனனும் தேர் மேலேறித் திரும்பிக் கொண்டிருக்கக் கூடிய வழியில் இந்திரன் ஒரு கிழட்டு வேதியனைப் போல உருமாறி வந்து நின்று கொண்டான். வேதியன் அழுது புலம்பியவாறு தளர்ந்து நின்று கொண்டிருந்தான்.