பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/462

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

அறத்தின் குரல்

அவனுக்குத் தேர் செலுத்துகின்றான். உலகத் தேரையே ஓட்டிவரும் பரம்பொருளாற்றலைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் கண்ணனே தேரைச் செலுத்துகின்றபோது அர்ச்சுனன் தோற்பது எங்ஙனம்? ஆகவே அர்ச்சுனனை வெல்வதென்பது நாம் கனவிலும் நினைக்கக்கூடாதது! அன்பிற்குரிய துரியோதன மன்னா! இப்போது இந்த நெருக்கடியான நிலையில் இன்னொரு விஷயத்தையும் உனக்கு நான் நினைவுபடுத்திவிட எண்ணுகிறேன். உடன் பிறந்தவர்களைப் பகைத்துக் கொள்வது என்றைக்கும் இம்மாதிரித் தொல்லையைத்தான் கொடுக்கும் அன்றே விதுரன் உனது அவைக்களத்தில் இந்த அறிவுரைகளை உனக்குக் கூறினான். நீ கேட்கவில்லை. அவனைக் கோபித்துக் கொண்டாய் பழித்துப் பேசினாய். உன் செயலால் உன்மேல் வெறுப்படைந்த அவன் தன் வில்லை ஒடித்து எறிந்து விட்டுத் தீர்த்த யாத்திரை சென்றுவிட்டான். அவன் இங்கே இப்போது இருந்தாலாவது போரில் உனக்குப் பேருதவியாக இருப்பான். அவன் முயன்றால் அர்ச்சுனன், வீமன் ஆகியோரைக் கூட எதிர்த்துப் போர் செய்ய முடியும். நடக்காததை நினைத்து வீண்பேச்சுப் பேசிக் கொண்டிருப்பதில் என்ன பயன்? இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம். நீ நினைக்கிறதைப் போல் சத்திரதன் பிழைப்பதும் பிழைக்காததும் நம் கையிலோ, நமது படைகள் கையிலோ இல்லை. அது அவனுடைய தலைவிதியின் கையில் இருக்கிறது. நீயே அர்ச்சுனனை எதிர்த்து நேருக்கு நேர் போர் செய்யப் போகிறேன் என்று சொல்லுகிறாய்! நல்லது. செய்துதான் பாரேன். இதோ என்னிடம் ஓர் அருமையான கவசம் இருக்கிறது. இதை மார்பிலும் உடலிலுமாக அணிந்து கொள்கின்றவர்களுக்குக் காயங்கள் ஏற்படாது. இந்தக் கவசத்தை முன்பு இந்திரன் பிரம்மாவிடமிருந்து பெற்றான். இந்திரனிடமிருந்து அங்கீரசன் பெற்றான். அங்கீரசனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நீ அர்ச்சுனனுடன் போரிடப் போவதாகச் சொல்வதனால் இந்தப் பெருமை வாய்ந்த கவசத்தை உனக்கு அணிந்துவிடுகின்றேன்.